

ஐபிஎல் 9-வது சீசன் போட்டிகள் வரும் 9-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொழில்முறை கிரிக்கெட் போட்டியான இந்த தொடரின் தொடக்க விழா வரும் 8-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில் இங்கிலாந்தின் பாப் பாடல் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாலிவுட் நடிகைகளான கேத்ரினா கைஃப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் ரன்வீர்சிங் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் டெல்லி பாப் பாடகர் யோ யோ ஹனி சிங்கும் கலந்து கொண்டு பாடுகிறார்.
சுமார் 200 நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சியும், ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவற்றுடன் கண்கவரும் லேசர் கற்றைகள் நிகழ்ச்சியும் ரசிகர்களை குதூகலப்படுத்த உள்ளது.
தொடக்க விழாவை தொடர்ந்து 9-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் புதிதாக இடம் பெற்றுள்ள ரைஸிங் புனே சூப்பர்கெயின்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
மே 29ம் தேதி இறுதிப்போட்டி இதே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. 56 லீக் ஆட்டங்கள், பிளேப் ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள், இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் இந்த சீசனில் நடைபெறுகிறது.