Published : 12 Mar 2022 03:17 PM
Last Updated : 12 Mar 2022 03:17 PM

மகளிர் உலகக் கோப்பை: அசத்தல் சதம், திருப்பம் கொடுத்த பௌலிங் - மே.இ.தீவுகள் அணியை அபாரமாக வீழ்த்திய இந்தியா!

ஹாமில்டன்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது இந்தியா.

நியூசிலாந்து நாட்டில் இந்த ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே, இந்தத் தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள இந்திய அணி இன்று ஹாமில்டன் நகர் மைதானத்தில் நடந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தன. இதனால், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போட்டியை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - பாட்டியா இணை துவக்கம் தந்தது. பாட்டியா 31 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டாக அவுட் ஆனார்.

இதன்பின் வந்த கேப்டன் மிதாலி ராஜ், தீப்தி சர்மா ஆகியோரும் சிங்கிள் டிஜிட் ரன்களில் வெளியேற, ஸ்மிருதி மந்தனா உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் கரம்கோர்த்தார். கடந்த சில போட்டிகளாகவே, ஹர்மன்ப்ரீத் கவுர் பார்மின்மையால் தவித்து வந்தார். இதனால் இவரும் சீக்கிரமாகவே நடையை கட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை பொய்யாக்கி ஸ்மிருதி மந்தனா உடன் சிறப்பான கூட்டணியை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே, கடந்த சில போட்டிகளாகவே உச்சகட்ட பார்மில் இருந்து வரும் ஸ்மிருதி மந்தனா இந்தப் போட்டியிலும் அந்த பார்மை தொடர்ந்தார். மேற்கிந்திய வீராங்கனைகள் பௌலிங்கை பவுண்டரிகளாக வீசி, சதம் அடித்தார். 123 ரன்கள் எடுத்து அவர் வெளியேற, கடைசி வரை இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் சதம் அடித்தார். இறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில் 109 ரன்களுக்கு அவரும் வெளியேறினார். ஓரே போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகளின் சதத்தால் அணி, 318 ரன்கள் என்ற இமாலய இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு விதித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஓப்பனிங் சிறப்பாகவே இருந்தது. டோட்டின், மேத்யூஸ் இருவருமே 100 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தனர். இவர்கள் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி வீராங்கனைகள் முயன்றும் பலனில்லை. பின்னர் சினே ராணா மூலம் அந்த திருப்பம் நடந்தது. முதல் இரண்டு விக்கெட்டுகளையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீசி மேற்கிந்திய தீவுகள் அணியின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதன்பின் சீட்டுக்கட்டு போல் சரிந்தது அந்த அணி. இறங்கிய 9 வீராங்கனைகளில் 6 பேர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற்றினர் இந்திய பௌலர்கள். இறுதியில் 41வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது இந்தியா. இந்திய தரப்பில் சினே ராணா மூன்று விக்கெட்டுகளும், மேக்னா சிங் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் முறையாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் தோல்வியை தழுவியுள்ளது. அதேநேரம், இந்த வெற்றியின் மூலம் தற்போது புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x