

பெங்களூரு: இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு வில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது.
இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 175 ரன்கள் விளாசினார். மேலும் பந்து வீச்சில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட்கள் வேட்டையாடி இருந்தார்.
2-வது டெஸ்ட் போட்டி
இந்த வெற்றியால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் பிங்க் பந்து பயன்படுத்தப்பட உள்ளது. இதுவரை இந்திய அணி 3 முறை பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் வங்கதேசம், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி கண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வி கண்டிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சிறிய மாற்றங்கள் இருக்கக்கூடும். கடந்த ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டரான அக்சர் படேல் சேர்க்கப்படக் கூடும்.
100 சதவீதம் ரசிகர்கள் அனுமதி
முதல் டெஸ்ட் போட்டியைக் காண 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியைக் காண 100 சதவீத ரசிகர்கள் அனுமதிக் கப்பட உள்ளனர். இது இரு அணி வீரர்களுக்கும் கூடுதல் உத்வேகத்தை அளிக்கக் கூடும்.
இலங்கை அணி இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டியில் 3 ஆட்டங்களில் பங்கேற்று 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையே அணியில் காயம் காரணமாக பதும் நிஷங்கா 2-வது டெஸ்டில் களமிறங்கமாட்டார் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வேகப்பந்து வீச்சாளரான லகிரு குமரா காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின்போது இடை யிலேயே விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது நிஷங்காவும் காயத்தால் விலகி உள்ளது இலங்கை அணி வீரர்களுக்கு கூடுதல் அழுத் தத்தைக் கொடுத்துள்ளது.