

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரீசாந்த், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓயவை அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கேரள அணிக்காக விளையாடி வந்தநிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்க கூறி கைது செய்யப்பட, இவர்கள் மூவருக்கும் வாழ்நாள் தடை விதித்து பிசிசிஐ ஒழுங்கு முறைக்குழு உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை எனக் கூறி விடுவித்தது. அதேநேரம், தன்னுடைய கருத்தையும், விசாரணையை அறிக்கையையும் கேட்காமல், பிசிசிஐ தடை விதித்துவிட்டது என்று ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டி, தடையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில் ஸ்ரீசாந்த்துக்கு சாதகமான முடிவு வர, பிசிசிஐ அவருக்கு விதித்த தண்டனையை குறைத்தது. தொடர்ந்து தண்டனை காலம் முடிந்ததை அடுத்து ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். ஆனால் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இதனிடையே, தற்போது முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார் ஸ்ரீசாந்த். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகுந்த சோகத்துடன் கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்காக, எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை இத்தோடு முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவு. இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையின் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய நடவடிக்கையாக நினைக்கிறேன். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் இருந்த ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக, 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2007 உலகக்கோப்பை டி20-யில் இவரது பங்களிப்பு பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.