

லண்டன்: ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த ஆண்டு தான் விளையாடிப் பெறும் பரிசுத்தொகைகள் அனைத்தையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் பிரிட்டன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே. உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் 14வது நாளை எட்டியுள்ளது. பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐநா அகதிகள் அமைப்பான UNHCR தெரிவித்துள்ளது.
இதனிடையே, முன்னாள் உலக நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே, இந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் தான் வெற்றிபெறும் பரிசுத்தொகையை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்தில் கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
ட்விட்டரில் விளக்கம்: இதுதொடர்பாக முர்ரே தனது ட்விட்டர் பதிவில், "உக்ரைனில் அதிகரித்து வரும் மோதலால் 7.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர். இந்த உதவி, குழந்தைகளின் கல்விக்கு உதவும். ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப் (UNICEF) உக்ரைனில் இருந்து இடம்பெயர்ந்த குழந்தைகளின் கல்விக்கான பணிகளை செய்யவுள்ளது. போரால் சேதமடைந்த பள்ளிகளின் மறுவாழ்வு, மாற்று உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கவுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் எனது பரிசுத் தொகையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நன்கொடையாக வழங்க இருக்கிறேன். இங்கிலாந்தில் உள்ள மற்றவர்களும் யுனிசெப் மூலம் போரினால் பாதிப்படைந்துள்ள குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப்-ன் தூதராக ஆன்டி முர்ரே செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ITF), பெண்கள் டென்னிஸ் சங்கம் (WTA) உள்ளிட்ட டென்னிஸ் அமைப்புகள் இணைந்து மனிதாபிமான உதவிக்காகவும் உக்ரைன் டென்னிஸ் கூட்டமைப்பிற்கு ஆதரவாகவும் 7,00,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.