

மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் டேரன் சமியை தொடர்ந்து, டுவைன் பிராவோவும் அவர்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார். மே.இ.தீவுகள் வாரியத்தை விட பிசிசிஐ தங்களுக்கு அதிக உதவி செய்துள்ளதாக அவர் பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பிராவோ அளித்த பேட்டியில், "எங்கள் நாட்டின் கிரிக்கெட் மேலாண்மை சரியானவர்களிடம் இல்லை. எங்கள் கிரிக்கெட் வாரியத்திலிருக்கும் அதிகாரிகள் இயக்குநர்கள் என யாரும் இதுவரை எங்களை கூப்பிட்டு பாராட்டவில்லை. இது நல்லதல்ல.
நாங்கள் இந்த கோப்பையை வெல்வோம் என்று அவர்கள் நம்பவோ, நினைக்கவோ இல்லை. அடிப்படையில் இது வீரர்களுக்கும் வாரியத்துக்கும் இடையிலான மோதல். (ஒப்பிட்டுப் பார்க்கும் போது) பிசிசிஐ எங்களுக்கு அதிக உதவி செய்துள்ளது.
எங்கள் அட்டவணையை பார்த்தால், இந்த வருடம் எங்கள் நாட்டுக்கு வேறெந்த டி20 போட்டியும் திட்டமிடப்படவில்லை. நான், கெயில், ரஸ்ஸல் யாரும் ஒரு நாள் போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இருக்கிறது. ஆனால் நாங்கள் அந்த நேரத்தில் இங்கிலாந்து டி20 லீக்கில் விளையாடிக் கொண்டிருப்போம். எங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பைப் பாருங்கள். எங்கள் வாரியத்தை விட பிசிசிஐ எங்களுக்கு நிறைய செய்கிறது" இவ்வாறு பிரவோ கூறியுள்ளார்.