

நியூசிலாந்து: பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மஹரூஃப்பின் குழந்தை பாத்திமாவுடன், இந்திய மகளிர் அணியினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளனர்.
நியூசிலாந்தில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. இம்முறை மிதாலி ராஜ் தலைமையில் களம்கண்டுள்ள இந்திய அணி, லீக் ஆட்டத்தில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வி கண்டதில்லை. இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி அடைந்துள்ளது . இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதில், இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பிறகு, இந்திய மகளிர் அணியினர், பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மஹரூஃப்பின் குழந்தை பாத்திமாவுடன் கொஞ்சி விளையாடினர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக புகைபடங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இரு நாட்டு ரசிகர்களும் அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விளையாட்டும், மோதல்களும் களத்திற்கும் உள்ளேதான்... வெளியே இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்கள் சகோதரத்துவத்தையே பேணுகின்றனர் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.