

மொஹாலி: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் 435வது விக்கெட்டை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் புதிய சாதனை படைத்தார்.
முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் இலங்கை அணி 390 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே, தொடக்க ஆட்டக்காரர் திரிமானேவை அஸ்வின் டக் அவுட் செய்தார்.
இதன்பின் 7வது ஓவரை வீசிய அஸ்வின், கடைசி பந்தில் பதும் நிசாங்காவை 6 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து 20 ரன்கள் எடுத்திருந்த சரித் அஸ்லங்காவை 36வது விக்கெட்டாக சாய்த்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தார் அஸ்வின்.
ஆம், சரித் அஸ்லங்காவின் விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினுக்கு 435வது விக்கெட் ஆகும். இதன் மூலம் கபில்தேவின் சாதனையை முறியடித்தார். 85 டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் 30 முறை 5 விக்கெட்களையும், 7 முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
இந்தி அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 227 இன்னிங்ஸில் 434 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அஸ்வின் 159 இன்னிங்ஸிலேயே அந்த சாதனையை முறியடித்தார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியர்களில் முதல் இடத்தில் உள்ளார். இப்போது அவருக்கு அடுத்த நிலையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.