டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கிடைக்காதது ஏமாற்றமே-டிவிலியர்ஸ்

டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கிடைக்காதது ஏமாற்றமே-டிவிலியர்ஸ்
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பு தனக்குக் கிடைக்கவில்லை என்பது பெரிய ஏமாற்றமாக உள்ளது என்று ஏ.பி.டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.

கிரேம் ஸ்மித் ஓய்வு அறிவித்ததையடுத்து, ஹஷிம் ஆம்லா டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆம்லா, டிவிலியர்ஸ் இடையே டெஸ்ட் கேப்டன் பொறுப்பிற்கு கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் தனக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படாதது குறித்து டிவிலியர்ஸ் கூறியதாவது:

"நான் டெஸ்ட் கேப்டன் இல்லை என்பது எனக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. எல்லோருக்கும் கனவுகளும் நம்பிக்கைகளும் இருக்கும் அது நிறைவேறும் என்ற ஆசையும் இருக்கும், நான் சூழ்நிலையை புரிந்து கொள்கிறேன், ஆனால் இந்த ஏமாற்றம் எனக்கும் ஆம்லாவுக்கும் இடையே வராமல் நான் பார்த்துக் கொள்வேன்.

இது எனது ஆட்டத்தையும், அணியில் எனது பொறுப்பையும் பாதித்தால் அது முட்டாள் தனமானது. ஆம்லாவுக்கு எனது வாழ்த்துக்கள், எனது முழு ஒத்துழைப்பு அவருக்கு எப்போதும் உண்டு" என்றார் டிவிலியர்ஸ்.

ஹஷிம் ஆம்லாவைக் கேப்டனாக்க அணியின் மூத்த வீரர்கள் ஆதரவு பெருமளவு இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், ஃபா டுபிளேசி, டுமினி ஆகியோர் ஆம்லா கேப்டனாவதை விரும்பியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஓய்வு பெற்ற ஸ்மித், மற்றும் ஜாக் காலீஸ் ஆகியோரும் ஆம்லாவை கேப்டனாக்க விரும்பியதாகவும் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in