Published : 01 Mar 2022 05:14 PM
Last Updated : 01 Mar 2022 05:14 PM

'கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்...' - ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்

மும்பை: இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் வீரர் ஜேசன் ராய். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருப்பதாக சொல்லியுள்ள ராய், இதற்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 15-வது சீசன் தொடங்க இன்னும் 25 நாட்களே உள்ளன. இந்த சீசனில் புதிய அணியாக அறிமுகமாகும் குஜராத் டைட்டன்ஸ், மெகா ஏலத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு எடுத்தது. அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஜேசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜேசன் ராய் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும், குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் மற்றும் அணியினருக்கு எனது வணக்கம்.

கனத்த இதயத்துடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், கேப்டன் ஹர்திக்கிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் கரோனா பாதிப்பு காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பயோ-பபிள் சூழ்நிலை, என்னை வெகுவாக பாதித்துள்ளது. இந்த தருணத்தில் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதே சரியானது எனத் தோன்றுகிறது. எனினும், குஜராத் டைட்டன்ஸ் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நான் பின்தொடர்வேன். ஹர்திக் தலைமையிலான டைட்டன்ஸ் அணி, முதல் சீசனிலேயே கோப்பையை வெல்வதற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஜேசன் ராய் விலகல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. காரணம், கடந்த சில மாதங்களாகவே ராய் நல்ல ஃபார்மில் இருந்துவருகிறார். மேலும் ஐபிஎல் தொடரிலும் நல்ல பெர்பாமென்ஸை வெளிப்படுத்தியும் உள்ளார். அவர் இருக்கும் பட்சத்தில் ஷுப்மன் கில்லுடன் ஓப்பனிங் இறங்க அதிக வாய்ப்புண்டு. இருவரும் எதிரணியை தங்களின் அதிரடிகளால் துவம்சம் செய்யும் திறன்கொண்டவர்கள் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதனால் தான் ராய் விலகல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ராய் தவிர, முகமது ஷமி, மேத்யூ வேட், லாக்கி பெர்குசன் போன்றோரையும் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. இதேபோல், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் ஏலத்திற்கு முன்னதாகவே குஜராத் டைட்டன்ஸ் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x