

தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 183 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் ஓப்பனிங் வீரர் பதும் நிசாங்கா 75 ரன்கள் எடுத்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. லக்னோவில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்த நிலையில் இன்று இரண்டாவது டி20 ஆட்டம், எழில்மிகு தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு நிசாங்கா, குணதிலகா இணை துவக்கம் தந்தது.
இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினாலும், போகப் போக அதிரடியை காட்டினார். குணதிலகா ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார். பின்னர் 38 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் அதே ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து வந்த அஸ்லங்கா, கமில் மிஸ்ரா, தினேஷ் சண்டிமால் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். ஆனாலும் மறுமுனையில் இருந்த ஓப்பனர் நிஷாங்கா நிதானமாக இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடினார். அவருக்கு கேப்டன் தசுன் சனங்கா ஒத்துழைப்பு கொடுக்க, இலங்கை அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது.
நிசாங்கா 73 ரன்கள் எடுத்த நிலையில், 19-வது ஓவரில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இலங்கை கேப்டன் தசுன் சனங்கா 47 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் பும்ரா, புவனேஷ்வர், ஜடேஜா, ஹர்ஷல் படேல், சஹால் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.