Published : 26 Feb 2022 07:00 PM
Last Updated : 26 Feb 2022 07:00 PM

’போருக்கு மத்தியில் நாம்...’ - உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு விளையாட்டு உலகின் எதிர்வினைகள்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, விளையாட்டு உலகின் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. விளையாட்டு வீரர்கள் பலரும் போருக்கு தங்களின் எதிர்ப்பைக் கடுமையாக பதிவு செய்து வருகின்றனர்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு உலகெங்கிலும் எதிர்ப்புகளைச் சம்பாதித்துள்ளது. எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து உக்ரைனை கையப்படுத்துவதில் ரஷ்ய படைகள் முன்னேறிச் செல்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், விரைவில் கீவ் நகரம் முழுவதும் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் செல்லும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவின் இந்தப் படையெடுப்பு விளையாட்டு உலகிலும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது.

இதனால், ரஷ்யாவை உள்ளடக்கிய விளையாட்டு நிகழ்வுகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நிர்வாகக் குழுவான UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இறுதிப்போட்டியை நடக்கப்போவதில்லை என்று UEFA அறிவித்துள்ளது. மேலும், "உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய ராணுவப் படையெடுப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றும் UEFA தெரிவித்துள்ளது.

இதேபோல், போலந்து, ஸ்வீடன் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் கால்பந்து சங்கங்கள் ரஷ்யாவில் உலகக் கோப்பை பிளே-ஆஃப் போட்டிகளை நடத்தக்கூடாது என்று ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. போலந்து நாடு, ரஷ்யாவுக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கவுள்ள 2022 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மன் கால்பந்து கிளப்பான ஷால்கேவின் முக்கிய ஸ்பான்சராக ரஷ்ய அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் இருந்துவந்தது. இப்போது போரை அடுத்து காஸ்ப்ரோம் லோகோவை போட்டிகளில் இருந்தும் வீரர்களில் உடைகளில் இருந்தும் நீக்க ஷால்கே கிளப் முடிவெடுத்துள்ளது.

உலக கால்பந்தாட்டக் குழுவான ஃபிஃபாவின் தலைவரான கியானி இன்ஃபான்டினோ, "உக்ரைனில் ரஷ்யா செய்யும் அனைத்து வன்முறைகளையும் ஃபிஃபா கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். உலக அளவில் முக்கிய கால்பந்தாட்ட கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட், ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட், உடனான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

அதேநேரம், இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணிகளின் வீரர்கள், மேலாளர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த வார இறுதியில் உக்ரைன் கொடிகளை அசைத்து ரஷ்ய படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து ரஷ்ய அணி வெளியேற்றப்படவுள்ளது.

வீரர்களின் மனநிலை: உக்ரேனிய வீரர் டெனிஸ் மோல்ச்சனோவுடன் இணைந்து கடந்த வாரம் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் தனது பதிவில், "இந்த தருணத்தில் எனது விளையாட்டு முக்கியம் இல்லை. தற்போது நடப்பது மிகவும் பயங்கரமானது. அமைதி திரும்ப வேண்டும்" என்றுள்ளார். மேலும் டென்னிஸ் தரவரிசையில் ஆண்கள் பிரிவில் உலகின் முதல் நிலை வீரராக இருக்கும் ரஷ்ய வீரரான டேனியல் மெட்வெடேவ் இதே கருத்தை முன்வைத்துள்ளார். அதில், "இந்த தருணத்தில் டென்னிஸ் முக்கியம் இல்லை. போர் என்ற அதிர்ச்சி செய்தியுடன் நான் கண் விழித்தேன். எனது மனது உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ரஃபேல் நடால் போர் குறித்து பேசுகையில், "இது ஒரு மோசமான செய்தி. யார் குற்றவாளி என்பதைப் பற்றியோ அல்லது பிரச்சினையைப் பற்றியோ நான் பேச விரும்பவில்லை, ஆனால், இந்த நூற்றாண்டிலும் போருக்கு மத்தியில் நாம் வாழ்கிறோம் என்பது எனக்கு நம்பமுடியாததாக உள்ளது. என்னால் நடப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. கூடிய விரைவில் போர் முடிவடையும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டின் பனிச்சறுக்கு வீரர்கள், போரைக் கண்டித்து இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். ரஷ்ய நகரமான சோச்சியில், இந்த ஆண்டுக்கான கார் பந்தய நிகழ்வான ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃபார்முலா ஒன் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கார் பந்தய விளையாட்டின் உலக சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், நான்கு முறை சாம்பியனான செபாஸ்டியன் வெட்டல் உட்பட பல வீரர்கள் உக்ரைன் மீதான ரஷ்ய போரை கண்டிக்கும் விதமாக ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் நிகழ்வில் பங்கேற்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து ஃபார்முலா ஒன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x