Published : 23 Feb 2022 03:55 PM
Last Updated : 23 Feb 2022 03:55 PM

35 வீரர்கள், 2 வெவ்வேறு அணிகள், 3 சுற்றுப் பயணங்கள் - டி20 உலகக் கோப்பைக்காக பிசிசிஐ மெகா பிளான்

மும்பை: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகும் விதத்தில், வெளிநாட்டுத் தொடர்களை அதிகப்படுத்த பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே திட்டமிட்ட தொடர்களுடன் கூடுதலாக சில தொடர்களை நடத்தவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. அதில் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால், இந்த முறை கோப்பையை வென்று ஆக வேண்டும் என தீவிரமான சில திட்டங்களை வகுத்து வருகிறது பிசிசிஐ நிர்வாகம். அதன்படி, இந்த எட்டு மாதங்களுக்குள் அதிகளவிலான டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் வகையில் சுற்றுப்பயணங்களை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் இந்திய அணி இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாட உள்ளது. அதில் ஒன்று, இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி. அதுபோக இந்த மாதம் தொடங்கும் இலங்கையுடான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே.

மற்ற தொடர்கள் அனைத்தும் ஷார்ட் பார்மெட் போட்டிகள்தான். அதிலும் இப்போது அதிகப்படியான டி20 போட்டிகளை விளையாடும் வகையில் மூன்று புதிய சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது. நாளை தொடங்கும் இலங்கை தொடர் மார்ச் 16-ஆம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகு, ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. மே மூன்றாவது வாரம் வரை தொடரும் ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, இந்திய அணி ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர்கள் அனைத்தும் இந்திய மண்ணில் நடக்கவுள்ளன.

இதன்பிறகே வெளிநாட்டுத் தொடர்கள் ஆரம்பிக்கின்றன. ஜூலையில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, மூன்று டி20 போட்டிகள் மட்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதன்பிறகு ஜிம்பாப்வே சுற்றுப்பயணமும், துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை தொடர். இவை இதற்கு முன் திட்டமிடப்பட்டவை. ஆனால், தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக, அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடர் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது என்று பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓர் உறுப்பு நாடு அணியுடன் இந்த இடைப்பட்ட காலத்தில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுவருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பைக்கு குறைவான நேரமே உள்ளதால், இந்த திட்டமிடல் வீரர்களுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்ற கவலையையும் பிசிசிஐ அறிந்துள்ளது. இதற்காக தற்போது 35 வீரர்கள் அடங்கிய மெகா குழுவை ஏற்கெனவே சிந்திக்க தொடங்கியுள்ளதாக பேட்டி ஒன்றில் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு எதிராக தொடர் மற்றும் இங்கிலாந்து தொடர் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வாய்ப்புள்ளதாம். எனவே, இந்த தொடருக்காக ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் அறிவிக்கப்படலாம் என்றும் அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார். கடந்தமுறை இலங்கை சுற்றுப்பயணத்தில் இரண்டாம் நிலை இந்திய அணி பங்கேற்றது போல், இதிலும் பங்கேற்கலாம்.

மேலும், பயோ - பப்புள் ஏற்கெனவே விவாதத்துக்கு உரிய ஒன்றாக இருப்பதால் வீரர்களின் ஓய்வும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த 35 பேர் கொண்டு இரண்டு அணிகளாக தேர்வு செய்யப்படும்போது முக்கியமான வீரர்களுக்கு அதிகமான ஓய்வு அளிக்கப்படலாம். இந்தத் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெறலாம். உலகக் கோப்பையில் விளையாடக்கூடிய அணியை பிசிசிஐ நிர்வாகம் ஓரளவு அடையாளம் கண்டுகொண்டாலும், இன்னும் திறமையான வீரர்களை அடையாளம் காண இந்தத் தொடர் உதவியாக இருக்கும் என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x