Published : 16 Jun 2014 09:19 AM
Last Updated : 16 Jun 2014 09:19 AM

மெஸ்ஸி அடித்த வெற்றி கோல்: போஸ்னியா-ஹெர்சகோவினா அணியை வீழ்த்தியது அர்ஜென்டீனா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டீனா அணி முதன் முதலாக உலகக் கோப்பையில் விளையாடும் போஸ்னியா-ஹெர்சகோவினா அணியை 2- 1 கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியது.

நடுக்களத்தில் 5 வீரர்கள், டிஃபண்டரில் 2 வீரர்கள் முன்களத்தில் 3 வீரர்கள் என்ற கள அமைப்புடன் அர்ஜென்டீனா இறங்கியது. போஸ்னியா அணிக்கு பிரேசில் ரசிகர்கள் உரத்த குரலில் ஆதரவு கொடுத்தனர்.

அவர்களை கேலி செய்யும் விதமாக அர்ஜென்டீனா ரசிகர்கள் "பீலேயை விட மரடோனா சிறந்த வீரர்" என்று பாட்டுப்பாடி வெறுப்பேற்றினர். மரடோனா போல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி இடைவேளைக்கு முன்பு மிகவும் சாதுவாக ஆடினார். மிகவும் சாதாரணமாக ஆடினார். வரும் பந்தை கோட்டை விடுவது, சோம்பேறித்தனமான நகர்தல் என்றுதான் மெஸ்ஸி இடைவேளைக்கு முன்பு ஆடினார்.

ஆட்டத்தின் 3வது நிமிடட்தில் அர்ஜென்டீனாவுக்கு கோலுக்கு இடப்பக்கத்திலிருந்து 40 அடி தூர ஃப்ரீ கிக் கிடைத்தது. மெஸ்ஸி அதனை அடிக்க மார்கஸ் ரோஜோ அதனை தலையால் முட்டி கோலுக்குள் அடிக்க முயன்றார். ஆனால் பந்து போஸ்னியா வீரர் சியாத் கொலாசினாக் காலில் அதுவாகவே பட்டு கோல் ஆனது. அர்ஜென்டீனா அணிக்கு போஸ்னியா அணி கோல் அடித்துக் கொடுத்த கணக்கில் அர்ஜென்டீனா 1-0 என்று முன்னிலை பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆட்டம் துவங்கிய 2 நிமிடங்கள் 8 வினாடிகளில் 'ஓன் கோல்' போடப்பட்டது இதுவே முதல் முறை. போஸ்னியா அணி இத்ற்காக அசந்து போய் விடவில்லை. தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் தொடுத்தனர். குறைந்தது 2 அல்லது 3 கோல்களையாவது அவர்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் அர்ஜென்டீனா கோல் கீப்பர் செர்ஜியோ ரொமேரோவின் கைகளில் நேராக அடிக்கப்பட்டது.

இடைவேளைக்குப் பிறகு அர்ஜென்டீன மேலாளர் சாபெல்லோ, அணியின் கள அமைப்பை மாற்றியதோடு, ஹிகுவே, ஃபெர்னாண்டோ கேகோ ஆகியோரைக் களமிறக்கினார். இடைவேளைக்குப் பிறகு போஸ்னியா அணி சற்றே ஆக்ரோஷத்தைக் கூட்டியது. போஸ்னிய வீரர் ஹஜோரோவிச் இரண்டு முறை அர்ஜென்டீனா கோல் கீப்பர் ரொமேரோவை அச்சுறுத்தினார். செனாத் லூலிச் அருகிலிருந்து தலையால் முட்டிய பந்து கோல் ஆகிவிடும் என்று எதிர்பார்த்த தருணத்தில் அர்ஜென்டீனா கோல் கீப்பர் ரொமேரோ அருமையாகத் தடுத்தார்.

அடுத்தடுத்து போஸ்னியா வீரர்கள் அர்ஜென்டீனா கோல் கீப்பர் கையிலேயே அடித்தனர்.அல்லது 35 அடி அல்லது 40 அடியிலிருந்து கோலுக்கான ஷாட்டை ஆடி விரயம் செய்தனர். இப்படியே போய்க்கொண்டிருந்த ஆட்டத்தில் 65வது நிமிடத்தில்தான் உயிர் வந்தது. மெஸ்ஸி மெஸ்ஸி என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பி கொண்டேயிருந்ததற்கு பலன் கிடைத்தது.

போஸ்னியா வீரர்கள் புடைசூழ நின்று கொண்டிருந்த மெஸ்ஸி தன்னிடம் பாஸ் செய்யப்பட்ட ஒரு பந்தை 3 அல்லது 4 போஸ்னிய வீரர்களைக் கடைந்து எடுத்து படுவேகமாக சீறிக்கொண்டு முன்னேறி கோலாக மற்றினார். இதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.

அதன் பிறகு மெஸ்ஸி, அகியுரோ கூட்டணி அச்சுறுத்தியது, ஆனால் கோல் அடிக்க முடியவில்லை, மாறாக ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருக்கும்போது போஸ்னியாவின் கடின உழப்பிற்கு பலன் கிடைத்தது.

அந்த அணியின் இபிசேவிச் கடைசியில் ரொமேரோவைக் கடந்து கோல் அடித்தார். போஸ்னியா அணியின் உலகக் கோப்பை முதல் கோல் ஆகும் இது. அர்ஜென்டீனா வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் ஆட்டம் மிகவும் தற்காப்புடன் மந்தமாகவே இருந்தது. இன்னொரு முறை போஸ்னியாவுடன் மோதும் வாய்ப்பு கிடைத்தால் அர்ஜென்டீனா தோற்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு தாக்குதல் கள அமைப்பை மாற்றி தற்காப்பான 4- 3- 3 என்ற பழைய ஃபார்முலாவுக்கு அர்ஜென்டீனா திரும்பியது அதன் தன்னம்பிக்கையின்மையையே காண்பிக்கிறது. மெஸ்ஸி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x