

சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக முதன்முதலாக டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணியினரிடத்தில் ஆழ்ந்த மகிழ்ச்சியின்மை இருக்கிறது என்கிறார் கெவின் பீட்டர்சன்.
லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி ஓவரின் 5வது பந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், எரங்காவின் ஷாட் பிட்ச் பவுன்சரில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆனால் அவரது கண்களில் கண்ணீர். இதற்கு முன் தோற்றபோதெல்லாம் கூட ஜேம்ஸ் ஆண்டர்சன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதில்லை.
இங்கிலாந்தின் மனோநிலை குறித்து பீட்டர்சன் தனது டெய்லி டெலிகிராப் பத்தியில் எழுதுகையில், “இலங்கைகு எதிராக 2 போட்டிகளிலும் வெற்றி பெறும் நிலையிலிருந்தனர். ஆனால் கோட்டைவிட்டனர். சீனியர் வீரர்கள் ஆஷஸ் படுதோல்விக்கு பிறகு சரியாக ஒருங்கிணையவில்லை என்பதை இது காட்டுகிறது. அவர்கள் கேப்டனிடமோ, பயிற்சியாளரிடமோ செல்வதில்லை.
பிராட், ஆண்டர்சன் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தளர்ந்திருந்தனர், ஜிம்மி ஆண்டர்சன் ஏன் உணர்ச்சிவசப்பட்டார்? கடந்த காலத்தில் நிறைய போட்டிகளைத் தோற்றிருக்கிறோம், ஆனால் ஆண்டர்சன் இத்தனை உணர்ச்சிவசப்பட்டதில்லை. கடினமான தருணங்கள் சரிவடைந்த தருணங்கள் இருந்திருக்கின்றன, ஆனால் அவர் கண்ணீர் விட்டுப் பார்த்ததில்லை.
இது எனக்கு இங்கிலாந்து அணியில் மகிழ்ச்சியில்லை என்பதையே காட்டுகிறது. ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்வி அவர்களை இன்னமும் அழுத்துகிறது. இதனால் அவர்கள் தங்களுக்குள்ளேயே போராடி வருகின்றனர்.
ரசிகர்களை நீண்ட நாளைக்குத் திசை திருப்ப முடியாது. அவர்களிடம் இது தைரியமான புதிய இங்கிலாந்து அணி, இது ஆக்ரோஷமாக ஆடும், என்றெல்லாம் சொல்லிவிட்டு அரதப் பழசான அதே கிரிக்கெட் உத்தியைக் கையாளும்போது ரசிகர்களுக்குத் தெரிந்து விடும்”
இவ்வாறு கூறியுள்ளார்.