

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோது கின்றன. மே 29-ம் தேதி வரை 51 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசு கிடைக்கும். 2-வது இடம் பெறும் அணி ரூ.10 கோடி பெறும். அடுத்த இரு இடங்களை கைப்பற்றும் அணிகள் தலா ரூ.6 கோடியை தட்டிச்செல்லும்.
சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா 2 ஆண்டு கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த அணிகளுக்கு பதிலாக ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் விளையாடுகின்றன.
8 அணிகள்
இந்த இரு அணிகளுடன் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஐதராபாத் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 14 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
பிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் நடைபெறும். இதில் லீக் போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்று 1-ல் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் (வெளியேற்றுதல்) மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணியும், தகுதி சுற்று 1-ல் தோல்வியடைந்த அணியும் தகுதி சுற்று 2-ல் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நுழையும் மற்றொரு அணியாக திகழும்.
கண்கவர் தொடக்க விழா
இதற்கிடையே, ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா மும்பை வொர்லியில் உள்ள நேசனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனத்துடன் விழா ஆரம்பமானது. இதைத்தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் குழு நடனம் ஆடினர்.
பின்னர் 8 அணிகளின் கேப்டன்கள் விழா மேடைக்கு வரவழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களை முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி அறிமுகம் செய்துவைத்தார். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையும் விழா மேடைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 8 கேப்டன்களும் போட்டிக்கான உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களான கேத்ரினா கைஃப், ரன்வீர்சிங், யோ யோ ஹனிசிங், அமெரிக்க பாப் பாடகர் கிறிஸ் பிரவுன், மேஜர் லேசரின் நடனக்குழுவும் அசத்தியது. ஆகியோரது நடன நிகழ்ச்சியும் அனைவரையும் கவர்ந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் டி 20 உலகக் கோப்பை சாம்பியன் வீரரான டிவைன் பிராவோ சலோ சலோ என்ற இந்தி பாடலை பாடினார். தொடக்க விழாவில் ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, பாலிவுட் நடிகர் சஞ்ஜய் தத், பிரித்தி ஜிந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மும்பை-புனே மோதல்
போட்டியின் தொடக்க நாளான இன்று மும்பை வான்கடே மைதானத் தில் இரவு 8 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின் றன. மும்பை அணி ரோஹித் சர்மா தலைமையிலும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோனி தலைமையிலும் களமிறங்குகிறது.
டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் அதிரடியில் மிரட்டிய லெண்டில் சிம்மன்ஸ், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். அம்பாட்டி ராயுடு, ஜோஸ் பட்லர், கோரே ஆண்டர்சன், கெய்ரோன் போல்லார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியில் மிரட்ட தயாராக உள்ளனர்.
பிற்பாதியில் மலிங்கா
யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா உடல் தகுதியுடன் இல்லாததால் தொடரின் பிற்பாதியிலேயே களமிறங்க வாய்ப்புள்ளது என பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது அணிக்கு இழப்பு தான் என்றாலும் ஜஸ்பிரிட் பும்ரா, ஆண்டர்சன், டிம் சவுத்தி, மிட்செல் மெஹ்லினகன், மெர்சன்ட் டி லாங்கே என பலமான வேகப்பந்து வீச்சு கூட்டணி உள்ளது. சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் அனு பவ வீரரான ஹர்பஜன் சிங்கை அணி பெரிதும் நம்பி உள்ளது.
தோனி
8 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய தோனி இம்முறை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். பேட்டிங்கில் தோனியுடன், அஜிங்க்ய ரஹானே, கெவின் பீட்டர்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், டு பிளெஸ்ஸிஸ் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக அல்பி மோர்கல், இர்பான் பதான் இடம் பெற்றுள்ளனர். சுழலில் அஸ்வின், ஆடம் ஸம்பா, அஸ்வின் முருகன், அங்கித் சர்மா ஆகியோரை கொண்டு வலுவாக உள்ளது. சென்னை அணிக்காக பல வெற்றி களை தேடிக்கொடுத்த தோனிக்கு இந்த ஐபிஎல் சீசன் சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
அணியில் உள்ள புதிய வீரர்களை ஒருங்கிணைத்து, சொந்த மைதானத்துக்கு தகுந்தபடி ஆட்ட யுக்திகளை ஆரம்ப போட்டிகளில் கையாள தோனி சற்று மெனக்கெட வேண்டியதிருக்கும்.
தமிழ் வர்ணனை
ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் சோனி சானல் நிறுவனம் கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் தமிழ் வர்ணனைக்கு ஏற்பாடு செய்துள்ளது. சோனி சிக்ஸ் சானலில் தமிழிலும், சோனி மேக்ஸில் இந்தியிலும், சோனி இஎஸ்பிஎன் சானலில் ஆங்கிலத்திலும் வர்ணணையை காணலாம்.
இதுவரை சாம்பியன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ்: 2010, 2011, கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 2012, 2014, மும்பை இந்தியன்ஸ்: 2013, 2015, ராஜஸ்தான்ன் ராயல்ஸ் 2008, டெக்கான் சார்ஜர்ஸ் 2009.
யுவராஜ் சிங்
கணுக்கால் காயம் காரணமாக உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலிருந்து விலகிய யுவராஜ் சிங், ஐபிஎல் தொடரில் முதல் இரு வாரங்களுக்கு விளையாடமாட்டார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.