பவுலிங், பீல்டிங் படுமோசம்: கிங்ஸ் லெவன் வீரர் கிளென் மேக்ஸ்வெல் சாடல்

பவுலிங், பீல்டிங் படுமோசம்: கிங்ஸ் லெவன் வீரர் கிளென் மேக்ஸ்வெல் சாடல்
Updated on
1 min read

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் நேற்று மொஹாலியில் தோல்வியடைந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் 5-வது தோல்வியைச் சந்தித்தது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கிங்ஸ் லெவன் வீரர் கிளென் மேக்ஸ்வெல், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் மிக மோசமாக இருப்பதாக சாடியுள்ளார்.

நேற்று சற்றே பசுந்தரை ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் தொடக்கத்தில் தட்டுத்தடுமாறியது. பார்த்திவ் படேல் 15 ரன்களில் மிட்செல் ஜான்சன் நோபாலில் அவுட் ஆனார், அடுத்த ப்ரீ ஹிட் பந்திலும் கேட்ச் கொடுத்தார். 32 ரன்களில் நெருக்கமான ஸ்டம்பிங் வாய்ப்பில் தப்பினார். பிறகு 66 ரன்களில் மிட் ஆஃபில் ஒரு கேட்ச் அவருக்கு விடப்பட்டது. இப்படி வாய்ப்புகள் கொடுத்தால் என்ன நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்தது, அவர் 58 பந்துகளில் 81 ரன்களை எடுக்க அம்பாத்தி ராயுடு 35 பந்துகளில் 67 ரன்களை விளாச இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 137 ரன்களைச் சேர்த்தனர்.

கிங்ஸ் லெவன் அணியில் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா அபாரமாக வீசி 4 ஓவர்களில் 20 ரன்களையே விட்டுக் கொடுத்து ரோஹித் சர்மாவை தொடகக்திலேயே பெவிலியன் அனுப்பினார். ஆனால் ஜான்சன், அக்சர் படேல், மோஹித்சர்மா, மேக்ஸ்வெல், சாஹு ஆகியோருக்கு சாத்துமுறை காத்திருந்த்து. இதனால் 189 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ், தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் மார்ஷ், மேக்ஸ்வெல், மில்லர் ஆகியோரது விடா முயற்சி பயனளிக்காமல் 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. பும்ரா 4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, மெக்லினாகன், சவுதீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்தத் தோல்வி குறித்து கிளென் மேக்ஸ்வெல் கூறும்போது, “எதிரணியினருக்கு நிறைய வாய்ப்புகளை கோட்டை விட்டோம், வந்த வாய்ப்புகளை தவற விட்டதுதன தற்போது நாங்கள் அட்டவணையில் கடைசி இடத்தில் இருக்கக் காரணமாகியுள்ளது.

இருமுறை பார்த்திவ் அவுட் ஆனார், ஆனால் அது நோ-பால், இதற்குப் பிறகு அவர் தனது இயல்பான ஆட்டத்தை ஆட முடிந்தது. ராயுடுவுக்கும் இதையேதான் செய்தோம். கேட்சைத் தவறவிட்டோம் இவரும் அடிக்க ஆரம்பித்தார். இவரும் தனது இயம்பான ஆட்டத்தை ஆடினார் இரண்டு சிக்சர்கள் எங்களுக்கு நெருக்கடியை அதிகரித்தது.

இப்போதைக்கு அணிக்கு எதுவும் சரியாக நடைபெறவில்லை. 12 ஓவர்கள் முடிந்து ஸ்கோரைப் பார்த்தால் 108-109 என்றுதான் இருந்ததாக நினைக்கிறேன். பவர் ப்ளேயில் நன்றாக கட்டுப்படுத்தி பிறகு தவற விட்டோம், மோசமான பீல்டிங்தான் எங்களை இந்த நிலைக்கு தாழ்த்தியுள்ளது.

தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்றால் போதும். நாங்கள் எங்களுக்குள் நேர்மையாக இருக்க வேண்டும், பேட்டிங் பீல்டிங், பவுலிங் ஆகியவற்றில் பெரிய முன்னேற்றம் தேவை”, இவ்வாறு கூறினார் மேக்ஸ்வெல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in