Published : 18 Feb 2022 09:54 PM
Last Updated : 18 Feb 2022 09:54 PM

கடைசிநாளில் கோலி கொடுத்த விலைமதிப்பற்ற கிஃப்ட் - சச்சின் பகிர்ந்த கண்ணீர் தருணம்

மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு டெண்டுல்கர் அளித்த பேட்டியில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஓய்வுபெற்ற கடைசி நாளன்று, மைதானத்தில் விராட் கோலியுடன் நடந்த நெகிழ்வான தருணம் தொடர்பாக பேசிய சச்சின், விராட் கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசு ஒன்றை வெளிப்படுத்தி கண்கலங்கினார்.

பேட்டியில், "ரசிகர்களிடமிருந்து விடைபெற்ற கடைசி நாளில் உணர்ச்சி வசத்தில் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது விராட் கோலி என் அருகில் வந்து, 'என் கையில் கட்டச் சொல்லி என் தந்தை கொடுத்த கயிறு ஒன்று நான் பையில் எப்போதும் வைத்திருப்பேன். என் தந்தை கொடுத்தது என்பதால் அது எனக்கு மிகவும் மதிப்புமிக்கது. அதனை நான் உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

என்னால் இதைவிட மதிப்புமிக்க எதையும் உங்களுக்கு கொடுத்துவிட முடியும் என்று தோன்றவில்லை. உங்கள் ஊக்கத்தால் இங்கு நான் வந்துள்ளேன். எங்களுக்கு நீங்கள் யார் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்னால் முடிந்த சிறிய பரிசு' என்று அந்த கயிறை எனக்கு பரிசாக கொடுத்தார்.

கோலியின் இந்த செயல் என் கண்ணை கலங்க வைத்தது. அந்த பரிசை மீண்டும் விராட் கோலியிடமே கொடுத்து, 'விலைமதிப்பற்ற இது உன்னுடன் தான் இருக்க வேண்டும். இது வேறு யாருக்கும் சொந்தமானது அல்ல, உன்னுடைய சொத்து. உன் கடைசி மூச்சு வரை இது உன்னிடமே இருக்க வேண்டும்' என்றேன்" என்று அந்த நெகிழ்வு பரிசு தருணத்தை வெளிப்படுத்தினார் சச்சின் டெண்டுல்கர்.

இதே பேட்டியில், சச்சினிடம் 'உங்கள் இருவரில் யார் நல்ல பேட்ஸ்மேன்' என்று சச்சின் - கோலி ஒப்பீடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த சச்சின், "நாங்கள் இருவருமே நல்ல பேட்ஸ்மேன்கள். இருவருமே ஒரே அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்" என்று சுவாரஸ்யமாக பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x