

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு இரண்டாண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அண்மையில் இந்திய அணி ஐந்தாம் முறையாக U19 உலகக்கோப்பையை கைப்பற்ற முக்கியப் பங்கு வகித்தவர் மும்பையைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். உலகக் கோப்பை தொடரில் திறமையான வேகப் பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் பேட்டிங்கில் அதிக தூர சிக்ஸர்களை விளாசி எதிரணிகளை கலங்கடித்தார். இவரின் ஆட்டத்தை அஸ்வின் வெகுவாக பாராட்டிய நிகழ்வும் நடந்தது. இந்நிலையில் ராஜ்வர்தன் வயது மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று மகாராஷ்டிர விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர், பிசிசிஐக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்துடன், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் வயது மோசடி செய்ததற்கான ஆதாரங்களை இணைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மராத்தி நாளேடான சாம்னா வெளியிட்டுள்ள செய்தியில், ஹங்கர்கேகரின் உண்மையான வயது 21. டெர்னா பப்ளிக் பள்ளியின் மாணவரான ஹங்கர்கேகர் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது பிறந்த தேதியை ஜனவரி 10, 2001-க்கு என்பதற்கு பதிலாக நவம்பர் 10, 2002 என்று மாற்றியுள்ளார்.
இந்த வயது குறைப்பால் அவரால் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாட முடிந்தது. இதனை ஐஏஎஸ் அதிகாரி ஓம்பிரகாஷ் பகோரியா உறுதிப்படுத்தியதோடு அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து பிசிசிஐக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ராஜ்வர்தனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியால் ரூ.1.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ராஜ்வர்தன். 140 கி.மீ வேகத்தில் பந்துவீசும் திறன்கொண்ட ராஜ்வர்தன், லோயர் ஆர்டரில் இறங்கி பவர் ஹிட்டராகவும் விளையாடுவார். உலகக் கோப்பையில் ஏழு போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர, இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்தவர், மொத்தமாக 52 ரன்களும் எடுத்தார்.
U19 உலகக்கோப்பையில் அவரின் பெர்பாமென்ஸ் ஈர்க்கவே, அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. மும்பை அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சித்தது. எனினும், சென்னை அவரை போட்டிக்கு மத்தியில் வாங்கியது. தற்போது எழுந்துள்ள சர்ச்சையால் ராஜ்வர்தன் சென்னை அணிக்காக விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை அவர் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட வாய்ப்புள்ளது.