Last Updated : 20 Apr, 2016 05:17 PM

 

Published : 20 Apr 2016 05:17 PM
Last Updated : 20 Apr 2016 05:17 PM

பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரியாக ராகுல் ஜோஹ்ரி நியமனம்

நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைக்கு இணங்க பிசிசிஐ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக ராகுல் ஜோஹ்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது நீதிபதி லோதா கமிட்டி பிசிசிஐ-க்கு தலைமைச் செயல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை மேற்கொண்டதையடுத்து பல்வேறு விண்ணப்பங்களை சீராய்ந்து பிசிசிஐ ராகுல் ஜோஹிரியை தேர்வு செய்துள்ளது.

இதனை பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகர் அறிவித்தார். இவர் பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூருக்கு கீழ் செயல்படுவார். பிசிசிஐ அமைப்பில் முதல் முதலாக தலைமைச் செயல் அதிகாரி பதவி உருவாக்கப்பட்டு அதற்கு ராகுல் ஜோஹ்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் ஜோஹ்ரி டிஸ்கவரி நெட்வொர்க்கில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் டிஸ்கவரி நெட்வொர்க்கின் ஆசிய பசிபிக் துணைத் தலைவராகவும் தெற்காசிய பொதுமேலாளராகவும் உயர் பதவி வகித்து வந்தார்.

இந்திய கிரிக்கெட் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்ய 3 உறுப்பினர் கொண்ட நீதிபதி லோதா தலைமை கமிட்டியின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படுவதாகும்.

லோதா கமிட்டி பரிந்துரைகள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதுடன், உச்ச நீதிமன்றத்திற்கும், பிசிசிஐ-க்கும் இடையே பரிந்துரைகளை அமல்படுத்துவதில் கடும் வாதவிவாதங்கள் நடைபெற்று வருவதும் கவனிக்கத்தக்கது.

2005-ம் ஆண்டு சரத் பவார் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற பிறகு தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும் என்று பரிந்துரை மேற்கொண்டார். ஆனால் பிசிசிஐ விதிகளின் படி தலைமைச் செயல் அதிகாரியின் பொறுப்புகள் அனைத்தும் செயலருக்கு அளிக்கப்பட்டிருப்பதால், ரத்னாகர் ஷெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனுபவமிக்க ராகுல் ஜோஹ்ரியை பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x