IPL Auction 2022 | இளம் வீரர்களை வாங்க கோடிகளை கொட்டிய அணிகள் - கலீல் அகமது, சகாரியாவுக்கு லக்

IPL Auction 2022 | இளம் வீரர்களை வாங்க கோடிகளை கொட்டிய அணிகள் - கலீல் அகமது, சகாரியாவுக்கு லக்
Updated on
1 min read

பெங்களூரு: 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் இரண்டாவது நாளாக பெங்களூருவில் இன்று தொடங்கியது. இன்று பல வீரர்கள் ஏலம் போகவில்லை. இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச், இந்திய வீரர் புஜாரா போன்றோர்களை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம் இளம்வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்கி குவித்தனர்.

வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதை டெல்லி அணி ரூ. 5.25 கோடிக்கு வாங்கியது. லக்னோ அணி இலங்கையின் துஸ்மந்தா சமீராவை ரூ.2 கோடிக்கு எடுத்தது. கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய இளம்வீரர் சேத்தன் சகாரியா இந்த முறை ரூ. 4.20 கோடிக்கு டெல்லி அணிக்கு செல்கிறார். சந்தீப் சர்மா பஞ்சாப் அணியால் ரூ.50 லட்சத்துக்கு மீண்டும் தக்கவைக்கப்பட்டார். ராஜஸ்தான் அணி நவ்தீப் சைனியை ரூ.2.6 கோடிக்கு வாங்கியது. ஜெயதேவ் உனட்கட் ரூ.1.3 கோடிக்கு மும்பை வசம் சென்றார்.

சுழற்பந்துவீச்சாளார்களில் மயங்க் மார்கண்டேவை ரூ.65 லட்சத்துக்கு மும்பை ஏலம் எடுத்தது. லக்னோ ஷாபாஸ் நதீமை 50 லட்ச ரூபாய்க்கு வசப்படுத்தியது. சென்னை அணி இலங்கையின் மிஸ்டரி ஸ்பின்னர் மகேஷ் தீக்சனாவை ரூ.70 லட்சத்துக்கு கைப்பற்றியது.

மேலும் ரிங்கு சிங்கை கொல்கத்தா ரூ.55 லட்சத்துக்கும், லக்னோ மனன் வோராவை ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தன. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் ஆல் ரவுண்டர்களில் மூன்றுபேரை தொடர்ச்சியாக டெல்லி அணி வாங்கியது. லலித் யாதவ் - ரூ.65 லட்சம், ரிபல் யாதவ் ரூ.20 லட்சம், U19 இந்திய அணியின் கேப்டன் யஷ் துல் - ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கியது டெல்லி.

திலக் வர்மாவை மும்பை அணி ரூ.1.7 கோடிக்கும், மஹிபால் லோமரோரை பெங்களூரு ரூ.95 லட்சத்துக்கும், அங்குல் ராய் ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா அணியாலும் வாங்கப்பட்டனர். சஞ்சய் யாதவ்வை மும்பை அணி ரூ.50 லட்சம் கொடுத்து எடுத்தது. U19 உலகக்கோப்பை வெல்ல முக்கிய நபராக விளங்கிய ராஜ் பாவாவை வாங்க போட்டி நிலவியது. ரூ.2 கோடிக்கு அவர் பஞ்சாப் வசம் சென்றார். U19 உலகக்கோப்பையில் இந்திய அணி சார்பில் ஓப்பனிங் இறங்கிய ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை சென்னை அணி ரூ.1.5 கோடிக்கு எடுத்தது. குஜராத் யாஷ் தயாளை ரூ.3.2 கோடிக்கு வாங்கியது. சிமர்ஜீத் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு பஞ்சாப் வாங்கியது.

அதேநேரம், U19 உலகக்கோப்பையை வெல்ல உதவிய மற்ற வீரர்களை எந்த அணியும் வாங்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் வாசு வட்ஸ், ஸ்பின்னர் விக்கி ஓஸ்ட்வால் என இருவரையும் எந்த அணியும் வாங்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in