ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு வசம் வனிந்து ஹசரங்கா... அணிகள் வரிந்துகட்டியதன் பின்னணி என்ன?

ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு வசம் வனிந்து ஹசரங்கா... அணிகள் வரிந்துகட்டியதன் பின்னணி என்ன?
Updated on
2 min read

பெங்களூரு: இன்று நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அணி உரிமையாளர்களால் போட்டிபோட்டு வாங்கப்பட்டவர் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா. அடிப்படை விலையாக ரூ.1 கோடி இவருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்திலேயே இவரை ரூ.2.8 கோடிக்கு ஏலம் கேட்க, வழக்கம் போல 3 கோடி என விலையை ஏற்றியது பஞ்சாப் அணி. சன்ரைசர்ஸ் விடாமல் அவரை எடுத்துவிடும் முனைப்பில் இருக்க, பெங்களூருவும் வர போட்டி பலமானது. இப்படியாக ரூ.2.8 கோடியில் தொடங்கி ரூ.10 கோடியை தாண்டிச் சென்றது. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.10.75 கோடிக்கு அவரை வாங்கியது. இந்தமுறை ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களில் வனிந்து ஹசரங்காவும் ஒருவர்.

ஹசரங்காவுக்கு டிமாண்ட் ஏன்? - இப்படி வனிந்து ஹசரங்காவுக்கு ஒவ்வொரு உரிமையாளர்களும் போட்டிபோட காரணம் அவரின் சமீபத்திய பெர்ஃபாமென்ஸ்கள்தான். கடந்த சில ஆண்டுகளாக சீனியர் வீரர்கள் இல்லாமல் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது இருக்கும் வீரர்களில் ஸ்டார் பர்ஃபாமர் என்றால் அது வனிந்து ஹசரங்கா தான். 24 வயதாகும் இவர் ஒரு லெக்ஸ்பின் ஆல்ரவுண்டர். தனது 19 வயதிலேயே இலங்கை அணிக்கு தேர்வான ஹசரங்காவின் முதல் சர்வதேச போட்டி ஜிம்பாப்வே எதிராக. முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்து அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார்.

இதன்பின் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறனை நிரூபித்து வந்தவர், சமீப நாட்களில் ஃபார்மின் உச்சத்தை தொட்டு வருகிறார். இன்றைய தேதியில் ஆசிய துணைக்கண்டத்தில் அபாயகரமான ஸ்பின்னர்களில் ஒருவராக கருதப்படுகிறார். லெக் ஸ்பின் மற்றும் கூக்ளியே இவரின் பலம். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடர்தான் அவருக்கான திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் தொடரில் இலங்கை அணியின் டாப் விக்கெட் டேக்கரும் இவரே. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் உட்பட மொத்தம் பத்து விக்கெட்டுகளை சாய்த்து அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார். இந்த பத்து விக்கெட்டுகளில் எய்டன் மார்க்ரம், டெம்பா பவுமா, டுவைன் பிரிட்டோரியஸ், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ மற்றும் இயோன் மோர்கன் போன்ற முக்கிய வீரர்களும் அடக்கம்.

உலகக்கோப்பை பெர்ஃபாமென்ஸால் அந்த தொடரில் 'பார்ட்னர்ஷிப் பிரேக்கர்' என்று அழைக்கப்பட்டார். முக்கியமான போட்டிகளில் மற்ற பவுலர்களால் பிரிக்க முடியாத பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்ததால் இவரை இப்படியாக சக வீரர்கள் அழைத்தனர். தொடர் முழுவதுமாக அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் விக்கெட் எடுத்துக்கொடுத்தார். பிரீமியர் லீக்கில் விளையாட ஏற்ற ஒரு வீரர் இவர். இலங்கை பிரீமியர் லீக் போன்ற ஷார்ட் பார்மெட் போட்டிகளில் திறமையாக செயல்பட்டுள்ள அவர், பல முறை தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளை வைத்துள்ளார்.

பவுலிங் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் வனிந்து ஆக்ரோஷமான ஷாட்களை விளையாடுவதால் மிடில் ஆர்டர்களில் சிறந்த பங்களிப்பை கொடுக்க முடியும். மேலும், டி20 போட்டிகளில் பவுலிங்கில் சிறந்த எக்கானமியும் கொண்டுள்ளதால்தான் இவரை ஒவ்வொரு அணி உரிமையாளர்களும் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கடந்த முறை ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தவருக்கு பிளேயிங் லெவனில் பெரிதாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தமுறையும் அதே அணி தான் அவரை வாங்கியுள்ளது. இம்முறை நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஏலத்தில் நடந்த போட்டி மூலமாக கண்கூடாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in