பிராவோ, கேத்ரினா கைஃப் நடனமாடுகின்றனர்: மும்பையில் இன்று பிரம்மாண்டமாக ஐபிஎல் தொடக்க விழா - மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் ஸ்டார் புனே நாளை மோதல்

பிராவோ, கேத்ரினா கைஃப் நடனமாடுகின்றனர்: மும்பையில் இன்று பிரம்மாண்டமாக ஐபிஎல் தொடக்க விழா - மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் ஸ்டார் புனே நாளை மோதல்
Updated on
3 min read

டி 20 உலகக் கோப்பை முடிவடைந்த நிலையில் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழாவின் 9-வது சீசன் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மும்பையில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் நாளை (9-ம் தேதி) முதல் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை-புனே அணிகள் வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா வரும் மே 29-ம் தேதி வரை மொத்தம் 51 நாட்கள் நடைபெறுகிறது.

சூதாட்ட புகாரில் சிக்கிய முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ் தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப் பட்டுள்ளதால் அந்த அணிகளுக்கு பதிலாக ரைசிங் ஸ்டார் புனே, குஜராத் லயன்ஸ் ஆகிய இரு அணி கள் புதிதாக இடம் பெற்றுள்ளன.

60 ஆட்டங்கள்

புதிய அணிகளுடன் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் என மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.

தொடக்க நாளான நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை-புனே அணிகள் மோதுகின்றன. மே 29ம் தேதி இறுதிப் போட்டி இதே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் 56 லீக் ஆட்டங்கள், பிளேப் ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள், இறுதிப் போட்டி என மொத்த ம் 60 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடைபெறுகிறது.

தோனி

சென்னை அணியை 6 முறை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று இரு முறை பட்டம் வென்று கொடுத்த கேப்டன் தோனி இம்முறை புதிதாக இடம் பெற்றுள்ள ரைசிங் ஸ்டார் புனே அணியை வழிநடத்துகிறார்.

மஞ்சள் நிற உடையில் விளையாடிய தோனிக்கு இந்த சீசன் நிச்சயம் கடும் சவாலாகவே இருக்கும். கடந்த 8 ஆண்டுகளாக அவர் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்திய நிலையில் தற்போது புதிய வீரர்களுடன், புதிய ஆடுகளத்தில் இந்த தொடரை எதிர்கொள்கிறார்.

அணியில் உள்ள வீரர்களை புரிந்து கொண்டு ஆடுகளத்தையும், அங்கு நிலவும் சூழ்நிலைகளையும் உள்வாங்கி வெற்றிகளை பெறுவதில் ஆரம்ப கட்டத்தில் அவருக்கு சிரமங்கள் ஏற்படக்கூடும். தோனிக்கு ஆறுதலான விஷயம் அஸ்வின், டு பிளெஸ்ஸி ஆகியோர் புனே அணியில் இடம் பிடித்துள்ளது தான்.

சென்னை அணியில் 3-வது வீரராக விளையாடிய ரெய்னா, குஜராத் அணிக்காக விளையாடு வதால் மூன்றாவது இடத்தில் தோனி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பயன்படுத்தக்கூடும். இதேபோல் டிவைன் பிராவோ இடத்தில் ஆல்பி மோர்கலை இடம் பெற செய்யக்கூடும். சமீபகாலமாக தொழில் முறை போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கெவின் பீட்டர்சனையும் தோனி கருத்தில் கொள்வார்.

சுரேஷ் ரெய்னா

சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் புதிதாக இடம் பெற்றுள்ள குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடுகிறார். சென்னை அணியில் நட்சத்திர வீரர்களாக இடம் பெற்றிருந்த டிவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, பிரண்டன் மெக்கலம், டிவைன் ஸ்மித் ஆகியோர் குஜராத் அணியில் இடம் பெற்றிருப்பது ரெய்னாவுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.

பெங்களூரு

டி 20 உலகக் கோப்பையில் உச்சக்கட்ட பார்மில் இருந்த விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக உள்ளார். இந்த அணியில் அதிரடி வீரர்களாக கெய்ல், டி வில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஷேன் வாட்சன், டி 20 உலகக் கோப்பையில் முத்திரை பதித்த சாமு வேல் பத்ரி ஆகியோரும் அணிக்கு வலுசேர்ப்பவர்களாக உள்ளனர்.

மும்பை

நடப்பு சாம்பியனான மும்பை அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. கடந்த ஆண்டு இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் அணியில் தொடர்கின்றனர். இவர்களுடன் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் இணைந்துள்ளார்.

டெல்லி

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஜாகீர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணி டி 20 உலகக் கோப்பை சாம்பியன் வீரரான கார்லோஸ் பிரத்வெயிட்டை பெரிதும் நம்பி உள்ளது. வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி ஓராண்டுக்கு பிறகு பந்து வீச தயராக உள்ளார்.

இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளூர் போட்டியில் கடந்த சீசனில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குயின்டன் டி காக், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடிய வீரர்களாக உள்ளனர்.

கொல்கத்தா

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வழக்கம் போல காம்பீர் தலைமையில் விளையாடுகிறது. கடந்த சீசனில் இந்த அணிக்காக விளையாடிய காலிஸ் இம்முறை பயிற்சியாளராக மாறியுள்ளார். சர்வதேச போட்டிகளில் பந்து வீச ஐசிசி-யால் தடை விதிக்கப்பட் டிருந்த சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் தனது பந்து வீச்சு முறையில் மாற்றம் செய்து கொண்டு இந்த தொடரில் பங்கேற்கிறார். ஆந்த்ரே ரஸல், மணீஷ்பாண்டே, ராபின் உத்தப்பா, ஷாகிப் அல்-ஹஸன், யூசுப் பதான் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

ஐதராபாத்

ஐதராபாத் அணியை ஷிகர் தவண் வழிநடத்துகிறார். அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா, வங்கதேச இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி தர ஆயத்தமாக உள்ளனர். டேவிட் வார்னர், வில்லியம்சன், யுவராஜ்சிங், மோர்கன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் உள்ளனர்.

பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார். மேக்ஸ்வெல், மிட்செல் ஜாண்சன், ஷான் மார்ஸ், குர்கீரத் மான் சிங், முரளி விஜய், ரிஸி தவண் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

தொடக்க விழா

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா மும்பை வொர்லியில் உள்ள நேசனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் இன்று (8-ம் தேதி) 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடக்க விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க பாப் பாடகர் கிறிஸ் பிரவுன் தொடக்க விழாவில் பாடுகிறார். மேஜர் லேசரின் நடனக்குழுவும் அசத்த இருக்கிறது.

பாலிவுட் பிரபலங்களான ரன்வீர்சிங், ஜாக்குலின் பெர்னாண்டஸ், கேத்ரினா கைஃப், யோ யோ ஹனிசிங் ஆகியோரது நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவற்றுடன் 200 நடன கலைஞர்கள் கலந்து கொள்ளும் நடன நிகழ்ச்சியும், கண்கவரும் லேசர் கற்றைகள் நிகழ்ச்சியும், வாணவேடிக்கையும் இடம் பெறுகின்றன.

பிராவோ நடனம்

முக்கிய நிகழ்ச்சியாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் டி 20 உலகக் கோப்பை சாம்பியன் வீரரான டிவைன் பிராவோவின் சாம்பியன் நடனமும் நடத்தப்படுகிறது. பிராவோவுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த சில வீரர்கள் நடனத்தில் பங்கேற்கின்றனர்.

தொடக்க விழா இறுதியில் 8 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுக்க உள்ளனர். இந்த கண்கவர் தொடக்க விழாவை சோனி மேக்ஸ், சோனி செட் மேக்ஸ் சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in