Published : 11 Feb 2022 08:32 PM
Last Updated : 11 Feb 2022 08:32 PM

எனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளை வேறு சிலர் அனுபவித்தனர் - ரஹானே ஆதங்கம்

மும்பை: ஆஸ்திரேலிய தொடரில் தான் எடுத்த முடிவுக்கான பாராட்டுகளை வேறு சிலர் அனுபவித்தனர் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே ஆதங்கப்பட்டுள்ளார்.

ஃபார்மின்மையால் தவித்துவரும் இந்திய அணி வீரர் அஜிங்கியா ரஹானே ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார். கடைசியாக, பார்டர்-கவாஸ்கர் தொடரில் கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை கொடுத்தவர், அதன்பிறகு சொல்லும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். இதனால், விமர்சனக் கணைகள் அவரை துளைத்தெடுத்து வருகின்றன. தனது பழைய ஃபார்முக்கு மீண்டும் திரும்ப இளம்வீரர் பிரித்திவி ஷா தலைமையில் ரஞ்சி டிராபியில் விளையாடவுள்ளார். இந்நிலையில், சில ஊடகங்களுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள ரஹானே, ஆஸ்திரேலிய தொடரில் தான் எடுத்த முடிவுகளுக்கான பாராட்டுகளை வேறு சிலர் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்டில் விராட் கோலி தலைமையில் படுதோல்வியை சந்தித்த இந்தியா, அதன்பிறகான மூன்று போட்டிகளில் கோலி இல்லாத நிலையில் ரஹானே தலைமையில் தொடரை வெல்லும். இதுதொடர்பாக பேசிய ரஹானே, "நான் அங்கு என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியும். நான் யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை. நான் செய்ததை சொல்லி, அதற்கான பாராட்டுகளை பெறுவது எனது இயல்பான குணம் அல்ல. ஆஸ்திரேலிய தொடரில், களத்திலும் சரி டிரஸ்ஸிங் ரூமிலும் சரி சில முடிவுகளை நானே எடுத்தேன். ஆனால் அதற்கான பலனை வேறு யாரோ அனுபவித்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, அணி வெற்றிபெற வேண்டும் என்பதுதான். ஓர் அணியாக நாங்கள் அங்கு பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியையே பெரிதாகப் பார்க்கிறேன். அதுவே, எனது மனதுக்கு இன்னும் நெருக்கமாக உள்ளது. அணியை வழிநடத்துவதில் எனக்கு வித்தியாசமான பாணி உள்ளது. என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நபருக்கும் நம்பிக்கையை வழங்குவது முக்கியம். எல்லோர் முன்னிலையிலும் பேசுவதை விட வீரர்களுடன் ஒருவருக்கு ஒருவர் பேசுவதை வழக்கமாக்கி கொண்டேன். ஒவ்வொரு கேப்டனுக்கும் விஷயங்களைக் கையாள்வதில் தனித்தனி பாணி உள்ளது. அதைக் கொண்டே வெற்றியை பெற்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, துணை கேப்டன் பதவிக்கு ரோஹித் சர்மா கொண்டுவரப்பட்டது குறித்து பேசிய ரஹானே, "அது முழுக்க முழுக்க தேர்வாளர்களின் முடிவு. எதுவம் எனது கன்ட்ரோலில் கிடையாது. அந்த முடிவை நான் மதிக்கிறேன். ரோஹித் சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x