Last Updated : 10 Feb, 2022 05:27 PM

Published : 10 Feb 2022 05:27 PM
Last Updated : 10 Feb 2022 05:27 PM

பிரசித் கிருஷ்ணா: இந்திய கிரிக்கெட்டில் வேகப் பந்துவீச்சுக்கு கிடைத்த மற்றுமொரு வைரம்!

'நீண்ட காலமாக இதுபோன்ற ஒரு ஸ்பெல்லை நான் பார்க்கவில்லை' - இது இந்திய கேப்டன் ரோஹித் நேற்றைய பிரசித் கிருஷ்ணாவின் பவுலிங் குறித்து தெரிவித்தது. ரோஹித் கூறியது உண்மைதான். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரசித்தின் ஸ்பெல் அப்படித்தான் இருந்தது. லைன் அண்ட் லெந்தில் அத்தனை துல்லியமாக பந்துவீசி, தனியொருவனாக மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். இந்த ஒரு ஸ்பெல்லால் நேற்று ஒரே இரவில் ஸ்டார் ஆக உயர்ந்துள்ளார் கர்நாடக மண்ணின் மைந்தனான இந்த பிரசித் கிருஷ்ணா.

முதல் போட்டியுடன் ஒப்பிடும் வேளையில் நேற்றையப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாராகவே விளையாடினார். இதை இப்படிச் சொல்வதை விட, மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர் எனலாம். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி, 237 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். இது எட்டக்கூடிய டார்கெட்தான். மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் லைன்-அப்பும் அதற்கேற்றார்போலவே இருந்தது. இதனால் மிகப்பெரிய நம்பிக்கையில் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

ஆனால், அனைத்து நம்பிக்கையும் தனது பவுன்ஸ் பவுலிங்கால் தகர்த்தெறிந்தார் இளம் புயல் பிரசித் கிருஷ்ணா. பிரசித்தின் இரண்டாவது ஸ்பெல் அது. மேற்கிந்திய தீவுகள் அணி ஒருபுறம் விக்கெட் சரிவை சந்தித்தாலும், அந்த அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் களத்தில் நுழைந்ததும் அதிரடியைக் கையாண்டார். அவரின் அணுகுமுறை, குறைந்த ரன்களே எடுத்திருந்த இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால், அவரை வீழ்த்த ஷர்துல் தாகூரின் ஸ்பெல்லை ஒரே ஓவரோடு முடித்துகொண்டு, கேப்டன் ரோஹித் அழைத்தது பிரசித்தை தான். ரோஹித் அழைத்தது சரியானதுதான் என்று தனது பவுலிங் மூலமாக நிரூபித்தார் பிரசித். பூரனுக்கு பேக் ஆப் லெந்த் டெலிவரி வீச எதிர்பார்த்தது போல் அது எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித்திடம் கேட்சாக சென்றது.

பூரனுக்கு மட்டுமல்ல, டேரன் பிராவோ மற்றும் பிராண்டன் கிங்கின் விக்கெட்டுகளையும் தனது சரியான லைன் அண்ட் லெந்த் பவுலிங்கால் வீழ்த்தினார். முதல் ஒருநாள் போட்டியுடன் ஒப்பிடும்போது நேற்று ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு உதவியது உண்மைதான். எனினும், பிரசித் மட்டுமே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு பவுலிங்கில் துல்லியத் தாக்குதலைத் தொடர்ந்தார். இதனால் வீசிய 9 ஓவர்களில் மூன்று மெய்டன் ஓவர்களுடன் வெறும் 12 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வரலாற்று வெற்றியை ருசிக்க உதவிகரமாக இருந்தார். பெரும்பாலும் நேற்று அவர் வீசியது அனைத்தும் ஷார்ட் ஆப் லெந்த் மட்டுமே. முதல் ஸ்பெல்லில் ஒரே ஒரு ஃபுல் லெந்த் டெலிவரி மட்டுமே அவரிடம் இருந்து வெளிப்பட்டது. இதனால் அவரின் ஓவர்களில் ரன்களை சேர்க்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

கடந்த காலங்களில் பிரசித் இதுபோன்ற சரியான லெந்தில் பந்துவீச நிறைய நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். ஏன் முதல் ஒருநாள் போட்டியில்கூட அவுட்ஸ்விங் வீச முயன்று நிறைய ஃபுல் லெந்த் டெலிவரிகளை வெளிப்படுத்தினார். இது பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்க்கவைத்தது. கடந்த ஆண்டு இங்கிலாந்து எதிராக நடந்த ஒருநாள் தொடர்தான் பிரசித்துக்கு முதல் சர்வதேச போட்டி. அன்று ஜானி பேர்ஸ்டோவ், அவரின் பவுலிங்கை நொறுக்கியிருப்பார். அந்தத் தொடரில் நிறையவே பாடங்களை கற்ற பிரசித், அதிலிருந்து மீண்டு வந்து தனது துல்லியமான பந்துவீச்சால் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.

"இந்தியாவுக்காக நான் கடைசியாக அறிமுகமாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது என்று நினைக்கிறேன். அன்றைய (இங்கிலாந்துக்கு எதிரான) அனுபவங்களுக்கு பிறகு, அணியில் நிலையான இடம் கிடைக்க நிறைய போராடினேன். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக குழுவாக ஒன்றாகப் பயிற்சி செய்தோம். ஒவ்வொருவருக்கும் எதிராக திட்டங்களை மிகத் தெளிவாக வகுத்து செயல்படுத்தினோம். அது பலனளித்ததில் மகிழ்ச்சி" என்று போட்டிக்குப் பிறகு பேசியுள்ள பிரசித் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் உயரமான பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்களை கண்டு, பயந்த காலம் உண்டு. ஆனால் இப்போது அதே செயல்முறையை பிரசித் மூலம் இந்தியாவும் கையிலெடுத்துள்ளது. சில காலங்களாக ஷமி - பும்ரா போன்ற பவுலர்களால் வேகப் பந்துவீச்சில் மற்ற அணிக்கு சவால் ஏற்படுத்திவந்தது இந்தியா. ஆனால், ஹிட்-தி-டெக் எனப்படும் உயரம் மற்றும் ஷார்ட் பால் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாதது குறையாக பார்க்கப்பட்டுவந்தது. அந்த குறையை போக்கும் சரியான ஒரு நபராக பிரசித்தின் வருகை அமைந்துள்ளது. இந்தியாவின் வேகப் பந்துவீச்சு யூனிட்டுக்கு புது வரவான பிரசித் கிருஷ்ணா, அணிக்கு மற்றொரு சக்தியாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவரின் நேற்றைய கேம்-பிரேக்கிங் ஸ்பெல்லே அதற்கு சாட்சி.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x