

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜ்காட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் லயன்ஸ் மோதியது. டாஸில் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து விராட் கோலி யும் ஷேன் வாட்சனும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக களம் இறங்கினர்.
அணியின் ஸ்கோர் 8 ரன்களாக இருந்தபோது ஷேன் வாட்சன் (6 ரன்கள்) ஆட்டம் இழக்க, கோலியு டன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். கடந்த ஆட்டங்களைப் போலவே டிவில்லியர்ஸ் - கோலி இணை இந்தப் போட்டியிலும் கலக்கும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் 20 ரன்களில் டம்பேவின் பந்தில் டிவில்லியர்ஸ் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து அணியின் முழுப் பொறுப்பையும் தனது தோளில் சுமந்த விராட் கோலி, சிக்சர்களும் பவுண்டரி களுமாக விளாசி ராஜ்காட்டில் பச்சைப்புல்லை பற்றவைத்தார். குஜராத் வீரர்களால் அவரது அதிரடியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
63 பந்துகளில் 100 ரன்களைத் திரட்டி விராட் கோலி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருக்க, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களைக் குவித்தது. கோலியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஆடிய கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து ஆடவந்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித்தும் (32 ரன்கள்), மெக்கல்லமும் (42 ரன்கள்) ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்ட அந்த அணி 10.4 ஓவர்களிலேயே 100 ரன்களைத் தொட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஏற்படுத்திக் கொடுத்த வலுவான அடித்தளத் தைப் பயன்படுத்தி சுரேஷ் ரெய்னாவும், தினேஷ் கார்த்திக்கும் குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
அணியின் ஸ்கோர் 140-ஆக இருந்தபோது சாஹல் வீசிய பந்தில் இக்பால் அப்துல்லாவிடம் கேட்ச் கொடுத்து ரெய்னா (28 ரன்கள்) ஆட்டம் இழந்தார். இருப்பினும் தினேஷ் கார்த்திக் 50 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் அணியை கரைசேர்த்தார். குஜராத் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.