Published : 05 Feb 2022 05:48 PM
Last Updated : 05 Feb 2022 05:48 PM

இஷான் கிஷனை தவிர வேறு சாய்ஸ் இல்லை - மே.இ.தீவுகள் தொடர் குறித்து ரோஹித்

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தன்னுடன் இஷான் கிஷன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். முன்னணி வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓப்பனிங் ஆப்ஷனுக்கு வேறு சாய்ஸ் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர் நாளை அகமதாபாத்தில் நரேந்தி மோடி மைதானத்தில் போட்டிகள் தொடங்குகிறது. முதல்முறையாக முழுநேர கேப்டனாக இந்த தொடர் மூலம் ரோஹித் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். இந்நிலையில்தான் ஓப்பனர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், நெட் பவுலர் நவ்தீப் சைனிக்கும், மேலும் அணியின் உதவியாளர்கள் மூவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் முழுமையாக குணம்பெறும் வரை தனிமையில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் மாயங் அகர்வால் மற்றும் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நாளை நடைபெறும் போட்டி தொடர்பாக கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். "இஷான் கிஷன் தான் இப்போது இருக்கும் ஒரே சாய்ஸ். அவரே என்னுடன் ஓப்பனிங் இறங்குவார். மாயங் அகர்வால் இருந்தாலும், அவர் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளார். அணியில் புதிதாக இணையும் நபர்கள் மூன்றுநாள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று விதியால் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் எப்போது அணிக்கு திரும்புவார்கள் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் மூவரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சமநிலை கொண்ட அணியை அமைப்பது மிக கடினம். கரோனா தொற்று நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும்" என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து விராட் கோலி பற்றி பேசுகையில், "விராட் கேப்டனாக இருந்தபோது, ​​நான் துணை கேப்டனாக இருந்தேன். அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து என் பணியைத் தொடங்கவிருக்கிறேன். வீரர்கள் தங்கள் பொறுப்புகளை புரிந்துகொள்வது அவசியம். அதனை அவர்களுக்கு புரிய வைப்பேன். ஒவ்வொரு வீரரிடம் இருந்தும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது பற்றிய தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x