Published : 03 Feb 2022 08:27 AM
Last Updated : 03 Feb 2022 08:27 AM

U-19 உலகக் கோப்பை: ஆஸி.யை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது இந்தியா

ஆண்டிகுவா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம், U-19 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வரலாற்றை படைத்தது இந்திய அணி.

அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆங்கிரீஷ் ரகுவன்ஷி 6 ரன்களிலும், ஹரூன் சிங் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த ஷேக் ரஷீத் - கேப்டன் யாஷ் துல் இணை பட்டையைக் கிளப்பியது. ஷேக் ரஷீத் 94 ரன்களைக் குவித்தார். அட்டகாச சதமடித்த கேப்டன் யாஷ் துல் 110 ரன்களைக் குவித்தார். இவர்கள் இருவரும் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதலே இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 41.5 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லச்லன் ஷா 51 ரன்களையும், கோரே மில்லர் 38 ரன்களையும், கேம்பல் கெல்லவே 30 ரன்களையும் சேர்த்தனர்.

இந்திய தரப்பில் விக்கி ஒஸ்த்வால் 3 விக்கெட்டுகளையும், ரவிகுமார், நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டுகளையும், கவுஷல் தம்பே, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்குத் துணைநின்ற இந்திய கேப்டன் யாஷ் குல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுதியது இது மூன்றாவது முறையாகும். 2018-ல் ப்ருத்வி ஷா தலைமையில் மோதியபோது இந்தியாவே வெற்றிபெற்றது. 2020-ல் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது; அப்போதும் இந்தியாவே வென்றது. இந்நிலையில், ஆண்டிகுவா தீவுகளில் நடந்த இந்த ஆண்டின் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை சாய்த்திருக்கிறது இந்தியா.

நடப்புத் தொடரின் ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்கள் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கேப்டன் யாஷ் துல், ஷாயிக் ரஷித் போன்ற வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட, மற்ற வீரர்களை கொண்டு அனைத்து எதிரணிகளையும் எளிதாக சாய்த்தது இந்தியா. இறுதிப்போட்டிக்கு முன்னதாக, கரோனா பாதிப்படைத்த வீரர்கள், அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இதனால் இந்திய அணி இன்னும் பலமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

மிகுந்த உத்வேகத்துடன் வெற்றிகளைக் குவித்து வரும் இந்திய அணியின் இந்த இளம்படை தனது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பையும் கைப்பற்றும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x