Published : 02 Feb 2022 05:06 PM
Last Updated : 02 Feb 2022 05:06 PM

ஐபிஎல் 2022: ஷ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.20 கோடி ஒதுக்கிய அணி - ஆகாஷ் சோப்ரா தகவல்

பெங்களூரு: ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.20 கோடி கொடுத்து எடுக்க ஓர் அணி நிர்வாகம் தயாராக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த சீசன் வரை விராட் கோலி கேப்டனாக இருந்தார். அவர் கேப்டன் பதவியை துறந்த நிலையில், ஆர்சிபி அணி புதிய கேப்டனுக்கான தேடலில் தீவிரமாக உள்ளது. அணியில் சீனியர் வீரராக இருந்த டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்துள்ள நிலையில், அடுத்த வரிசையில் முக்கிய வீரராக இருப்பவர் கிளென் மேக்ஸ்வெல். கோலி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் கிளென் மேக்ஸ்வெலையும் ஆர்சிபி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. என்றாலும், இவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்குமா என்பது கேள்வியாக உள்ளது. இந்தநிலையில்தான் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.20 கோடி கொடுத்து எடுக்க பெங்களூரு அணி தயாராக உள்ளதுபோல் யாரோ ஒருவர் தனக்குத் தெரிவித்தாக இந்திய அணியின் முன்னாள் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சோப்ரா தனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலின் நிகழ்ச்சியில் இதுதொடர்பாக பேசினார். "ஷ்ரேயாஸ் ஐயர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படலாம். ரூ.15-16 கோடியை தாண்டி அவர் ஏலம் போகலாம். ஷ்ரேயாஸ் ஐயரை ஏலம் எடுக்க ஆர்சிபி அணி ரூ.20 கோடி வைத்துள்ளதாக யாரோ என்னிடம் சொன்னார்கள். கேகேஆர் அல்லது ஆர்சிபியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் தொடர வாய்ப்புள்ளது. அவரை எடுக்க பஞ்சாப் அணி ஏலத்தில் போட்டியிடும் என நான் நினைக்கவில்லை. நேர்மையாகச் சொல்வதானால், இந்த முறை ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த வீரராக ஷ்ரேயாஸ் இருப்பார். இஷான் கிஷான் மார்கியூ செட்டில் இடம்பிடித்திருந்தால், அவருக்கும் ஷ்ரேயாஸ்க்கும் போட்டி இருந்திருக்கும். பட்டியலில் இஷான் கிஷான் இல்லாததால் ஷ்ரேயாஸ்க்கே அதிக தொகை கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வரும் 12, 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன. இதற்கிடையே ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 355 வீரர்களும் அடங்குவர். இதில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். 48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக உள்ளது. 20 பேருக்கு ரூ.1.50 கோடி அடிப்படை விலை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x