Published : 02 Feb 2022 04:25 PM
Last Updated : 02 Feb 2022 04:25 PM

U-19 உலகக் கோப்பை: நம்பிக்கை தரும் இளம்படை - இறுதிக்கு முன்னேறி வரலாறு படைக்குமா இந்தியா?

ஆண்டிகுவா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆண்டிகுவா தீவுகளில் நடந்துவருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக இங்கிலாந்து தகுதிபெற்றுள்ளது. மற்றொரு அரையிறுதியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

நடப்புத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி, வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொடரின் ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்கள் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. கேப்டன் யாஷ் துல், ஷாயிக் ரஷித் போன்ற வீரர்கள் கரோனா பாதிப்பு ஏற்பட, மற்ற வீரர்களை கொண்டு அனைத்து எதிரணிகளையும் எளிதாக சாய்த்தது இந்தியா. இறுதிப்போட்டிக்கு முன்னதாக, கரோனா பாதிப்படைத்த வீரர்கள், அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இதனால் இந்திய அணி இன்னும் பலமாக உள்ளது. என்றாலும் அவர்களின் ஃபார்ம் குறித்த நிலைதான் தெரியவில்லை.

அதேநேரம், ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆங்கிரிஷ், ஆல் ரவுண்டர் ராஜ் பவா, ஹங்கர்கேகர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு ஒரு நல்ல விஷயம். இதேபோல் பந்துவீச்சில் ரவிக்குமார், விக்கி ஒஸ்ட்வெல் போன்றோரும் இந்திய அணிக்கு தூண்களாக உள்ளனர். ஆங்கிரிஷ் மற்றும் ராஜ் பவா இந்தத் தொடரில் ஆளுக்கொரு சதத்துடன் நிறைய ரன்களை குவித்துள்ளனர். மற்றொரு ஆல்ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அதிரடியாக விளையாடக் கூடியவர். அயர்லாந்துக்கு எதிராக 17 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.

மறுபுறம் ஆஸ்திரேலிய அணியும் பலமான அணிதான். அந்த அணியின் ஓப்பனிங் வீரர் டியாகு வெய்லி இந்தத் தொடரில் மட்டும் இரண்டு அரைசதம் மற்றும் ஒரு சதம் நல்ல ஃபார்மில் உள்ளார். மற்றொரு ஓப்பனிங் வீரர் காம்ப்பெல் கெல்லவே 54, 47 என சராசரிக்கும் அதிகமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இந்த இணை வேகப்பந்துவீச்சை எளிதாக இந்தத் தொடர் முழுவதும் சமாளித்துள்ளது. இன்று போட்டி நடைபெறும் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை ஆஸ்திரேலியா ஒரு கை பார்க்கும். ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கோரி மில்லர், எய்டன் காஹில் மற்றும் கூப்பர் போன்றோர் அதிரடியாக ஆடக்கூடியவர்கள். பேட்டிங்கை போலவே ஆஸ்திரேலியாவின் பாஸ்ட் பவுலிங் யூனிட்டும் வலுவாக உள்ளது.

அரையிறுதிப் போட்டி வரை வந்ததற்கு அந்த அணியின் வேகப்பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம், சுழற்பந்துவீச்சு. அந்த அணியின் பலவீனமாக இருக்கும் ஸ்பின் பவுலிங்கை இந்திய ட்ரம்ப் கார்டாக பயன்படுத்தினால் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும். விக்கி ஓஸ்ட்வால் போன்ற இந்தியாவின் ஸ்பின்னர்களின் கைகளில் தான் இன்றைய வெற்றி உள்ளது எனலாம்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் மோதுவது இது மூன்றாவது முறையாகும். 2018-ல் ப்ருத்வி ஷா தலைமையில் மோதியபோது இந்தியாவே வெற்றிபெற்றது. 2020-ல் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. அப்போதும் இந்தியாவே வென்றது. இதனால், இந்தமுறை இந்தியாவை பழிதீர்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்கும். இரு அணிகளும் சம பலத்துடன் இன்று மோதவுள்ளன. இதனால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா வென்றால், தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற வரலாற்றை படைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x