

மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
படுவேகம் காட்டிய ஆஸ்திரேலிய அணி வீரர்களின் படுவேகமான கால்களுக்கு முன்னால் இந்திய தடுப்பாட்டம் ஒன்றும் செய்ய முடியாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
நேற்று அறிமுக வீரர்களை கொண்ட இளம் ஜப்பான் வீரர்களிடமே இந்திய வீர்ர்கள் ‘போராடி’ 2-1 என்று வெற்றி பெற்றனர். ஆனால் நேற்றைய ஆட்டத்திலேயே இந்திய அணியின் தாக்குதல் ஆட்டம், தடுப்பாட்டம் இரண்டுமே சரியாக அமையவில்லை என்பது பலராலும் சுட்டிக் காட்டப்பட்ட நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் முழு பலவீனத்தை அம்பலப்படுத்தியது.
ஆஸ்திரேலிய அணியில் பிளேக் கோவர்ஸ் (5-வது நிமிடம்), ஜேகப் வெட்டன் (13), எடி ஆக்கெண்டன் (20), சைமன் ஆர்சர்ட் (25), மேட் கோடெஸ் (53) ஆகியோர் 5 கோல்களைத் திணித்தனர். இந்தியாவுக்காக ஒரே பெனால்டி கார்னர் வாய்ப்பை ருபிந்தர் பால் சிங் 8-வது நிமிடத்தில் கோலாக மாற்றினார்.
பந்துகளை ஆஸ்திரேலிய எல்லைக்கு எடுத்து செல்லும் போது கோல் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியாமையும், தடுப்பாட்டத்தில் ஏகப்பட்ட இடைவெளிகளை ஏற்படுத்தியதும் இந்திய படுதோல்விக்குக் காரணமாக அமைந்தன. 3-வது நிமிடத்தில் இந்திய வீரர் சந்தனா திம்மையா கொடுத்த அருமையான பாஸை எஸ்.வி.சுனில் சேகரிக்கத் தவறினார், காரணம் அவர் கொஞ்ச தூரம் அதிகமாக முன்னேறியிருந்தார்.
முதலில் 5-வது நிமிடத்தில் கோவர்ஸ் அடித்த பளார் ஷாட் ஒன்று இந்திய கோலைத் தாக்க ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது, ஆனால் 8-வது நிமிடத்தில் மந்தீப் சிங், ஆஸ்திரேலிய தடுப்பு வீரர் காலில் பந்தை தட்டி விட்டார், பெனால்டி பகுதியானதால் கார்னர் வாய்ப்பு கிடைத்தது அதனை ருபீந்தர்பால் சிங் கோலாக மாற்றி சமன் செய்தார், ஆனால் இந்த நடைமுறையில் எதிர்த்து வந்த ஆஸ்திரேலிய தடுப்பாட்ட வீரர்களுடன் மோதியதில் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதற்கு 2 நிமிடம் கழித்து ஒரு நகர்வில் சுனிலும் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் மட்டுமே இருந்தனர், ஆனால் சுனில் ஷாட்டை கோல் கீப்பர் தட்டி விட்டார். 44-வது நிமிடத்திலும் மந்தீப் சிங், ஆஸ்திரேலிய கோல் கீப்பர் மட்டுமே இருந்த வாய்ப்பை நேராக கோல் கீப்பருக்கே அடித்து கோட்டை விட்டார்.
இதனையடுத்து 53-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா 5-வது கோலையும் திணிக்க இந்தியா ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறியது.
வரும் ஞாயிறன்று 3-வது போட்டியில் கனடாவைச் சந்திக்கிறது இந்தியா.