Last Updated : 28 Jan, 2022 07:30 PM

Published : 28 Jan 2022 07:30 PM
Last Updated : 28 Jan 2022 07:30 PM

சஸ்பெண்ட் முதல் இந்திய அணியில் இடம்வரை: இது தீபக் ஹூடாவின் மறுபிரவேசம்

பரோடா: மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் 26 வயது வீரர் தீபக் ஹூடா. கடந்த இரண்டு ஆண்டுகள் நிறைய சர்ச்சைகளை சந்தித்த ஹூடா, அதிலிருந்து மீண்டு இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

அவர் தனது எட்டு ஆண்டுகள் கடின உழைப்பால் அணிக்கு தேர்வாகி இருக்கும் கதைதான் இது.

பரோடா வீரர் தீபக் ஹூடா, ஒரு நாள் இர்பான் பதானிடம் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு ஏன் தனக்கு கிடைக்கவில்லை என்பது குறித்து விவாதித்து உள்ளார். அன்றைய விவாததில் தனது ஜூனியரான தீபக் ஹூடாவிடம் மனஉறுதியை கண்ட இர்பான், "கடினமாக பயிற்சி செய். உனது உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தை கவனித்துக் கொள். அமைதியாக உன்னுடைய வேலை செய். உன்னுடைய நேரம் வரும். உனக்கான வாய்ப்பு தேடிவரும்" என்று உத்வேகம் கொடுத்துள்ளார். அன்று இர்பான் கொடுத்த ஊக்கத்தால் தனது பயிற்சியை மேம்படுத்தினார். அவர் கொடுத்த பயிற்சிகளை மூன்றாண்டுகள் விடாமுயற்சியாக தொடர்ந்தார். அந்த கடின உழைப்பு இர்பான் சொன்னது போல், அவருக்கான நேரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், ஏறக்குறைய எட்டு ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார் தீபக் ஹூடா. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஹூடா இடம்பெற்றுள்ளார். பரோடா மாநில அணியில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான தீபக் ஹூடா, இத்தனை ஆண்டுகளாக திறமை மிகுந்த ஒரு ஆல் ரவுண்டராக செயல்பட்டுள்ளார். ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர் மட்டுமல்ல, அட்டாக்கிங் பேட்ஸ்மேனாகவும் திறமையை வெளிப்படுத்தியவர் ஹூடா. லிஸ்ட் ஏ கரியரில் அவரின் ஸ்ட்ரைகிங் ரேட் 90. அதுவே டி20 போட்டிகளில் 139. ஓப்பனிங்கும் விளையாடுவார், அதேநேரம் டெயிலண்டர் இடத்திலும் இறங்கி அதிரடி காட்டுவார்.

அவர் தற்போது இந்திய அணிக்கு தேர்வானது ஏன் முக்கியவத்துவம் பெறுகிறது என்பதற்கு ஒரு சம்பவத்தை விளக்க வேண்டும். கடந்த ஆண்டு முழுவதும் தீபக் ஹூடாவின் வாழ்க்கை நிச்சயமற்ற தன்மை, விரக்தியால் சூழ்ந்திருந்தது. இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த அளவுக்கு ஊடகங்களில் அவரின் செய்திகள் நிறைந்திருந்தன. 2020 சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணிக்கு ஹூடா தேர்வாகவில்லை. இதனையடுத்து அணிக்கு தேர்வாகாதது குறித்து பரோடா கேப்டன் க்ருனால் பாண்டியாவுடன் சண்டையிட்டு பயோ-பபுள் பாதுகாப்பில் இருந்து வெளியேறினார். பின்னர் அவரை முழு சீசனில் இருந்தும் பரோடா கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்தது.

விளைவு அவரின் சக வீரர்கள் களத்தில் விளையாடி கொண்டிருக்கும்போது ஹூடா அறையில் தன்னை முடக்கிகொண்டார். குடும்பம், நண்பர்கள் என யாரையும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. எல்லோரும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே கருதினர்.

ஆனால் மாற்றி சிந்தித்த ஹூடா பரோடா அணியில் இருந்து வெளியேறினார். ராஜஸ்தான் அணியில் இணைந்து கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். பரோடா சங்கத்தை விட ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் மிகச்சிறியது. பொதுவாக தொழில்முறை வீரர்கள் பெரிய அணியிலிருந்து சிறிய அணிகளுக்கு மாறும்போது மிகப்பெரிய தொகையை கேட்பது வழக்கம். ஹூடா அப்படி எந்த தொகையும் கேட்கவில்லை.

பணம் ஒரு பொருட்டல்ல, கிரிக்கெட்டே பிரதானம் என்று ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கினார். ராஜஸ்தான் நிர்வாகம் அவர் மீது கொண்ட நம்பிக்கைக்கு பலன் கிடைத்தது. சையத் முஷ்டாக் அலி டிராபியில் ராஜஸ்தான் அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆனார். ஆறு ஆட்டங்களில் விளையாடி 294 ரன்களை குவித்தார். அவரின் திறமையை உணர்ந்து ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் விஜய் ஹசாரே டிராபிக்கான கேப்டனாக நியமித்தது. அதிலும் அவர் கர்நாடக அணிக்கு எதிராக ஒரு சதம் உட்பட ஆறு போட்டிகளில் 198 ரன்கள் எடுத்து தன்னை நிரூபித்தார்.

இடைநீக்கத்திற்குப் பிறகு, ஹூடா ஐபிஎல்லில் இடம்பெறுவதிலும் சிக்கல் இருந்தது. அந்த சிக்கலை தீர்த்தவர்கள் அனில் கும்ப்ளே மற்றும் கேஎல் ராகுல். இந்த விஷயங்கள் அவரின் நம்பிக்கையை அதிகரிக்க, 2020ல் பரோடா அணியால் வெளியேற்றப்பட்ட சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்திய அணிக்கு தேர்வாகி தன் திறமையை சோதித்தவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார் ஹூடா. 2017-18ம் ஆண்டே இந்திய அணிக்கு தேர்வானாலும், அவரால் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இன்னொரு வாய்ப்பு கிடைக்க ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த காரணங்கள் தான் அவரின் தேர்வு முக்கியவத்துவம் பெற்றுள்ளது.

2013 முதல் வழிகாட்டியாக இருக்கும் இர்பான் பதான் மற்றும் தான் சந்தித்த கடினமான நேரங்கள் குறித்து, "இர்பான் மற்றும் யூசுப் பதான் உதவியால், நான் முரண்பாடுகளை சமாளித்து மீண்டு வந்துள்ளேன். எனக்குக் கிடைத்துள்ள அனைத்துப் புகழுக்கும் தகுதியானவர்கள் அவர்களே. ஒரு வழிகாட்டியாக இருந்து, அவர்கள் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தப் பாடங்கள் உண்மையில் என்னை அணிக்கு தேர்வாக உதவியுள்ளது.

அவர்கள் எனக்கு அமைதியாக இருக்க கற்றுக் கொடுத்தார்கள். அமைதியின் சக்தியை எனக்கு உணர்த்தினார்கள். ஓர் இளைஞனுக்கு அமைதியின்மை இருப்பது இயற்கையானது. நானும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் அமைதியில்லாமல் இருந்தேன். அது எனது ஆட்டத்திற்கு இடையூறாக இருந்தது. அதில் இருந்து மீள அவர்களே எனக்கு உதவினார்கள். இர்பான் பாய் எப்போதும் என்னிடம் தெரிவிப்பது 'உன்னுடைய நேரம் வரும்' என்பது தான். கடந்த இரண்டு வருடங்கள் நான் சந்தித்த கடினமான நாட்கள் தான் என்னை முதிர்ச்சியடைந்த கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளது" என்று விவரித்துள்ளார் ஹூடா.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x