

ஆடுகளத்தில் விராட் கோலி ஒரு பீஸ்ட்; ஆனால் மற்றபடி அவர் ரொம்பவே அமைதியான நபர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தாரின் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் அவர் இவ்வாறு தெரித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த பின்னர் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், ஆடுகளத்தில் விராட் கோலி ஒரு வேட்டை மிருகம் போன்றவர். அவரது விளையாட்டு அவ்வளவு வெறித்தனமாக இருக்கும். களத்தில் இறங்கிவிட்டால் எதைப் பற்றியும் அவருக்குக் கவலை கிடையாது. உணர்ச்சிமிகு ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆனால், நேரில் அவர் அப்படியே எதிர்மறை பாங்கு கொண்டவர். மிகவும் அமைதியாக, எல்லாவற்றையும் மிகவும் கூலாக இருப்பார். இத்தனை நாள் அவர் ஒரு கேப்டனாக தனது பங்களிப்பைக் கொடுத்தார். இப்போது கேப்டன்ஸி இல்லாத போதுதான் சவால்கள் வரும். இப்போது அவர் அதே பழைய உத்வேகத்துடன் விளையாடி இந்தியாவுக்காக ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும். அதை இப்போதும் செய்துவிட்டால் அவர் ஒரு முழு வட்டத்தைப் பூர்த்தி செய்துவிடுவார்.
இவ்வாறு ரவி சாஸ்திரி பேட்டியில் கூறியுள்ளார்.
இதேபோல், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியிலும் ரவி சாஸ்திரி, விராட் கோலிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், "உலகக் கோப்பையை வென்று தரும் கேப்டன் தான் சிறந்த கேப்டன் என்றால், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் கூடத்தான் உலகக் கோப்பையை வென்றதில்லை. அப்படியென்றால் அவர்கள் நல்ல வீரர்கள் இல்லை என்று அர்த்தமாகுமா? சச்சின் டெண்டுல்கர் கூட 6 உலகக் கோப்பைகளில் விளையாடிய பின்னர் தான் உலகக் கோப்பையை வென்றார்" என்று கூறியுள்ளார்.
கோலிக்கு ஆதரவாக ரவி சாஸ்திரி தொடர்ந்து பேசி வருவதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை.
ரவி சாஸ்திரிஇதற்கிடையில், இந்திய அணி பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கி மேற்கு இந்தியத்தீவுகள் அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. தவிர 3 டுவென்டி 20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.