

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுக்கு பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட செய்தி அனுப்பியுள்ளார்.
தாங்கள் விளையாடும் நாட்டையும் தாண்டி, உலகம் முழுக்க ரசிகர்களைப் பெறும் ஆற்றல் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. அந்த ஆற்றலைப் பெற்ற வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் கிறிஸ் கெயில். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டியில் ஆடிவந்தாலும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவரை நேசிக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்தியாவில் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை அடுத்து இந்திய மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் கெயில். வாழ்த்தோடு, இந்திய பிரதமர் மோடியிடம் இருந்து தனக்கு தனிப்பட்ட மெசேஜ் கிடைத்துள்ளதாக கெயில் நெகிழ்வுடன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியுடனும், இந்திய மக்களுடனும் எனது நெருங்கிய தனிப்பட்ட உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி எனக்கு அனுப்பிய தனிப்பட்ட மெசேஜ் கண்டு இன்று நான் விழித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ் கெயில், ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டம் மற்றும் இந்திய வீரர்களுடன் அவருக்கு இருந்த காரணமாக இந்தியாவில் பிரபலமானவர். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ள கெயில், அதிகபட்சமாக பெங்களூர் அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 154.40 ஸ்ட்ரைக் ரேட்டில் 3420 ரன்கள் எடுத்துள்ளார்.
சில மாதங்கள் முன் கரீபியன் தீவுகளில் உள்ள ஜமைக்கா, பர்படாஸ், ஆன்டிகுவா ஆகிய நாடுகளுக்கு இந்திய அரசு கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைத்தபோது மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த கெயில், இந்தியாவுக்கு தனது நன்றியை தெரிவித்ததோடு, இந்தியா வரும்போது நிச்சயம் பிரதமர் மோடியைச் சந்திப்பேன் என்றும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.