Published : 25 Jan 2022 04:11 PM
Last Updated : 25 Jan 2022 04:11 PM

இந்தியாவில் மது விருந்து, போதை, பணம், மிரட்டல் - ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் விவரித்த ஸ்பாட் ஃபிக்சிங் பயங்கர அனுபவம்

ஹராரே: தன்னை சூதாட்ட வலையில் சிக்கவைக்க இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லர் விவரித்துள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் டெய்லர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என ஜிம்பாப்வே அணியை கேப்டனாக வழிநடத்திய பிரெண்டன் டெய்லர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனும்கூட. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது ஓய்வை அறிவித்தார்.

பிரெண்டன் டெய்லர் வெளியிட்டுள்ள அறிக்கை ஜிம்பாப்வே மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் உலகத்தையும் சற்று அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்திய பயணத்தின்போது இந்திய தொழிலதிபர் ஒருவரால் அவருக்கு ஏற்பட்ட சங்கடமான நிகழ்வைதான் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. அதில், "இரண்டு வருடங்களுக்கும் மேலாக நான் ஒரு சுமையைச் சுமந்து வருகிறேன். இது கடந்த சில காலங்களாக மனரீதியாக என்னை கஷ்டப்படுத்தியது. சமீபத்தில்தான் இந்தக் கதையை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்த வகையில் இப்போது பொதுமக்களுக்கும் பகிர்ந்துகொள்கிறேன்.

அக்டோபர் 2019 பிற்பகுதியில் இந்திய தொழிலதிபர் ஒருவர் அணுகி, ஜிம்பாப்வேயில் டி20 போட்டிகள் நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் குறித்து விவாதிக்க என்னை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த விவாதத்துக்காக எனக்கு ரூ.15 லட்சம் வரை தரப்படும் என்றார். அவரின் பேச்சில் நான் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருந்தேன். ஆனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ஆறு மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது காரணமாக, அணிக்காக தொடர்ந்து விளையாட முடியுமா என்கிற பயமும் எங்களின் அப்போதைய நிலைமையாக இருந்தது. இதனால் எதிர்கால தேவை கருதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு அவர்களின் ஆலோசனையில் பங்கேற்றேன்.

பயணத்தின் கடைசி நாள் இரவு ஹோட்டலில், தொழிலதிபரும் அவரது சகாக்களும் என்னை ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே எனக்கு மதுவிருந்து அளிக்கப்பட்டது. கூடவே எனக்கு போதைப்பொருளையும் கொடுத்தனர். யோசிக்காமல் நானும் முட்டாள்தனமாக அதைப் பயன்படுத்தினேன். அன்று இரவு நடந்தவை இன்னும் என் வாழ்க்கையை பாதிக்கிறது. பார்ட்டிக்கு மறுநாள் காலை, அதே ஆட்கள் எனது அறைக்குள் நுழைந்து, நான் இரவு போதைப்பொருள் எடுத்துக்கொண்டதை வீடியோவாக எடுத்துவைத்ததை காட்டி என்னை மிரட்டத் தொடங்கினார்கள்.

சர்வதேச போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ய வேண்டும் என்றும், அதற்கு சம்மதிக்காவிட்டால் அந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று அச்சுறுத்தினார்கள். அந்த ஆறு பேரின் மிரட்டலால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து வேறுவழியில்லாமல், அவர்கள் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

எனக்கு 15,000 டாலர்கள் கொடுத்தார்கள். இந்த தொகை ஸ்பாட் பிக்சிங்கிற்கான முன்தொகை என்றும், வேலை முடிந்ததும் கூடுதலாக 20,000 டாலர்கள் தரப்படும் என்றார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்ல வேறுவழி இல்லை என்பதால் பணத்தை பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினேன்.

அந்த நேரத்தில் எனக்கு வேறு வழியில்லை என்பதே என் நிலைமை. அதற்காக நான் தெளிவான மனநிலையில் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய நோக்கம் அன்று அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான். அதனால், பணத்தை பெற்றுக்கொண்டு நாடு திரும்பினேன். வீட்டுக்கு வந்த பிறகு இந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம், எனது உடல்நலத்தையும் பாதித்தது. மனநோய் சிகிச்சை எடுக்கவும் நேர்ந்தது.

இந்த தருணங்களில் அந்த தொழிலதிபர் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கத் தொடங்கினார். ஆனால் நான் கொடுக்கவில்லை. இந்தக் குற்றம் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் நான்கு மாதங்கள் கழித்து புகார் தெரிவித்தேன். நான்கு மாதம் என்பது மிக நீண்ட தாமதம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஐசிசியிடம் புகார் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியற்கு காரணம் என் குடும்பத்தின் பாதுகாப்பும் நலனும்தான். அதில் நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே ஐசிசியை அணுகினேன்.

எனது இக்கட்டான நிலை, குடும்பத்தின் பாதுகாப்பு, வாழ்க்கை குறித்த எனக்கு ஏற்பட்ட உண்மையான பயத்தை விளக்கினால், புகாருக்கான தாமதத்தை ஐசிசி புரிந்துகொள்ளும் என்று நினைத்தேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. இந்த விஷயத்தில் நான் அறியாமையை வெளிப்படுத்தவில்லை. எனக்கு தெரிந்தே எல்லாம் நடந்தது. ஆனால், நான் எந்த விதமான மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் ஏமாற்றுக்காரன் கிடையாது. ஐசிசி விசாரணைகளின் போது என்னால் முடிந்தவரை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்தேன்.

இப்போது, எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பல ஆண்டு தடை விதிக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை நானும் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு சூதாட்ட அணுகுமுறையையும் உடனே ஐசிசிக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்கு எனது கதை ஒரு பாடமாக இருக்கும் நம்புகிறேன். கிரிக்கெட் என்னும் அழகான விளையாட்டின் மீதான எனது காதல், என் வழியில் வீசப்படும் எந்த அச்சுறுத்தல்களையும் விட அதிகமாக உள்ளது. நான் உருவாக்கிய இந்தக் குழப்பத்தில் இருந்து மீள முயன்று வருகிறேன்" என்று பிரெண்டன் டெய்லர் தெரிவித்துள்ளார்.

தனது தவறை வெளிப்படையாக பிரெண்டன் டெய்லர் ஒப்புக்கொண்டது அவருக்கு பாராட்டுகளை தேடித் தந்துள்ளது. அதேபோல் சர்வதேச வீரர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், "சூதாட்டம் குறித்து புகாரளிப்பதில் தாமதம் செய்ததை பிரண்டன் டெய்லர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ஒப்புக்கொண்ட தன்மை என் மனசாட்சியையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நான் டெய்லரை ஆதரிக்கவில்லை என தவறாக எண்ண வேண்டாம். நான்கு குழந்தைகளின் தந்தையான அவர் குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அஞ்சி புகாரளிக்க தாமதம் செய்துள்ளார். யாராவது டெய்லரையோ அல்லது அவரது குடும்பத்தையோ உடல்ரீதியாக காயப்படுத்த முயன்றால் என்ன செய்வது. எனவே, இவரைப்போன்று சூதாட்டம் தொடர்பாக புகாரளிக்கும் வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பதிவில், "சூதாட்ட விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பிரெண்டனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எல்லா பலமும் கிடைக்க வேண்டும்" என்று ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x