Published : 24 Jan 2022 05:34 PM
Last Updated : 24 Jan 2022 05:34 PM

ஐசிசி மகளிர் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் விருதை வென்றார் ஸ்மிருதி மந்தனா

ஐசிசி-யின் 2021-ஆம் ஆண்டின் மகளிர் கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட்டர் விருதை வென்றிருக்கிறார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா.

இது குறித்து ஐசிசி இன்று வெளியிட்ட அறிவிப்பில், “2021-ஆம் ஆண்டின் மகளிர் கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட்டர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், தென் ஆப்பிரிக்காவின் லிசெல் லீ மற்றும் அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோருடன் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவும் இடம்பெற்றிருந்தார். இதில், 2021-ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட்டருக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வெல்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கடந்த வருடம் கடினமாகவே இருந்தது. ஆனால், அணிக்கு ஸ்மிருதி மந்தனா சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இதன் காரணமாக 2021-ஆம் ஆண்டு ஸ்மிருதி மந்தனாவுக்கு சிறந்த வருடமாகவே அமைந்தது.

குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் போட்டி தொடரில் 8 போட்டிகளில் இந்திய மகளிர் அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு போட்டிகளிலும் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக பேட்டிங் செய்தார். மேலும், இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியிலும் முதன் இன்னிங்ஸில் 78 ரன்கள் எடுத்து இந்திய அணி டிரா செய்ய உதவினார்.

25 வயதாகும் ஸ்மிருதி மந்தனா இதுவரை 62 ஒருநாள் போட்டிகளிலும், 84 டிவென்டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் ஒருநாள் போட்டிகளில் 2,337 ரன்களும், டி20 போட்டிகளில் 1,971 ரன்களும் சேர்த்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மிருதி 325 ரன்களை சேர்த்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x