

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச சையது மோடி 2022 பேட்மிண்டன் இறுதி போட்டியில் வெற்றி பெற்று பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சர்வதேச சையது மோடி 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது.
தகுதிச் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற இருவருக்கு இன்று இறுதி போட்டி நடைபெற்றது.
இதில் மகளிர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில்
2ம் ஆண்டு பி டெக் படித்து வரும் நாக்பூரைச் சேர்ந்த 20 வயதான மாளவிகா பன்சோட் என்ற மாணவி நேருக்கு நேர் மோதினர்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதால் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் மாளவிகா பன்சோட்டை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, ரஷ்யாவின் ஈவ்ஜீனியா கொசெட்ஸ்கயாவை முதல் செட்டில் 21-11 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
பி.வி.சிந்து வெற்றி பெற ஒரு செட் மீதம் இருந்த நிலையில், ரஷ்ய வீராங்கனை பாதியிலேயே விலகிக் கொள்வதாக அறிவித்ததால் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.