

கேப்டன்சியை துறக்க விராட் கோலி கட்டாயப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயர் அக்தர் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக கடந்த ஜனவரி 15 ஆம் தேதியன்று, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். விலகல் குறித்து கோலி, "என்னுடைய பணியை முழுமையாக நேர்மையாகச்செய்தேன், நான் பதவியிலிருந்து இறங்க சரியான தருணம்" என்று கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு சோயப் அக்தர் ஒரு பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
விராத் கேப்டன்சியைத் தானாக விட்டுவிலகவில்லை. அவர் அவ்வாறு செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டார். இது அவர் கேப்டன்சியைத் துறப்பதற்கான சரியான நேரமில்லை. அவர் இரும்பால் ஆனவர் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம். அவர் ஒரு சிறந்த மனிதர். சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் உலகில் அவர் மற்றவர்களைவிட நிறைய சாதித்துள்ளார். அவர், அவரது பாணியில் இயல்பாக இன்னும் சில காலம் விளையாட வேண்டும். அவர் எப்போதும் பாட்டம் ஹேண்ட் ஸ்டைலில் விளையாடுவார். என்னைப் பொறுத்தவரை பாட்டம் ஹேண்ட் ப்ளேயர்கள் தான் முதலில் சிக்கலை சந்த்ப்பார்கள் என நினைக்கிறேன்.
விராட் கோலி எல்லா கசப்புணர்வையும் மறந்துவிட்டு, அனைவரையும் மன்னித்துவிட்டு முன்னேறிச் சென்று விளையாட வேண்டும். பிசிசிஐ இந்த விவகாரத்தில் நல்லதொரு முடிவை எட்டும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு சோயப் அக்தர் கூறினார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக, உலகக் கோப்பை முடிந்தபின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். ஆனால், அதன்பின் ஒருநாள் தொடருக்கான அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கப்பட்டார். இது தொடர்பாக விராட் கோலிக்கும், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்களும், சொல்லாததை சொன்னதாக இருவரும் மாறி மாறி கூறிவந்தனர். பிசிசிஐயுடன் மோதலில் ஈடுபட்டபோதே விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டிருந்திருக்கும் என்ற விமர்சனங்களும் நிலவின.
இந்நிலையில், பிசிசிஐ மீது மறைமுக விமர்சனம் போல் கேப்டன்சியை துறக்க விராட் கோலி கட்டாயப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயர் அக்தர் தெரிவித்திருக்கிறார்.