Published : 19 Jan 2022 07:18 PM
Last Updated : 19 Jan 2022 07:18 PM

'கேப்டன் கூல்' தோனி வாங்கிய விண்டேஜ் மாடல் கார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விண்டேஜ் மாடல் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

எம்.எஸ்.தோனியும், பைக் மற்றும் கார்கள் மீதான அவரின் காதலும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் அல்ல. கார் பிரியர் ஆன தோனி தனது பயன்பாட்டுக்காகப் பல வகையான கார்களை வாங்கி வைத்துள்ளார். இப்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது 'லேண்ட் ரோவர் 3' மாடல் கார். Big Boy Toyz என்ற நிறுவனம் உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களின் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களை ஆன்லைன் மூலமாக ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் ரோல்ஸ் ராய்ஸ், காடிலாக், ப்யூக், செவ்ரோலெட், லேண்ட் ரோவர், ஆஸ்டின், மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களின் புகழ்பெற்ற 19 பிரத்யேக கிளாசிக் வகையான கார்கள் இடம்பெற்றிருந்தன.

எம்.எஸ்.தோனி இந்த ஏலத்தில் பங்கேற்று 'லேண்ட் ரோவர் சீரிஸ் III ஸ்டேஷன் வேகன்' மாடல் காரை வாங்கியுள்ளார். இந்த கார் 1971-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஏலத்தை நடத்திய நிறுவனம் தோனி வாங்கிய லேண்ட் ரோவர் காரின் விலையை வெளியிட மறுத்துள்ளது.

ஆன்லைன் மூலம் நடந்த ஏலத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களுக்குப் பிடித்தமான கார்களை வாங்கினர். Volkswagen Beetle என்ற மாடல் காரின் ஏலம் 1 ரூபாய்க்குத் தொடங்கி 25 லட்ச ரூபாய் வரை சென்றுள்ளது. ஒரு இளம் தொழில்முனைவோர் இந்த காரை வாங்கினார் என்று அந்த ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் பலர் விண்டேஜ் கார்களை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்ததாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஏலத்தில் இடம்பெற்ற 50 சதவிகித கார்கள் விற்றுள்ளன.

ஏலம் தொடர்பாகப் பேசியுள்ள பிக் பாய் டாய்ஸ் நிறுவனர் ஜதின் அஹுஜா, "விண்டேஜ் கார் மற்றும் கிளாசிக் காரை வைத்திருப்பது ஒரு ஓவியத்தைச் சொந்தமாக வைத்திருப்பது, ஒரு கலைப்பொருளைச் சொந்தமாக்குவது போன்று ஒரு தனித்துவமான அனுபவமாகும். நடந்து முடிந்த ஏலம் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களை விரும்பும் நாட்டின் அனைத்து கார் ஆர்வலர்களையும் இலக்காகக் கொண்டு நடந்தது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x