Published : 19 Jan 2022 06:52 PM
Last Updated : 19 Jan 2022 06:52 PM

ரஞ்சி டிராபி ரத்தும், வீரர்களின் அவல நிலையும்: பிஹார் கேப்டன் கவலை

உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீரர்கள் நிதி மற்றும் ஃபார்ம் இழப்பு போன்ற காரணிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஞ்சி டிராபியின் 2021-22 சீசன் கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா காரணமாக ரத்து செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. என்றாலும் இந்தத் தொடர் ரத்து உள்நாட்டு வீரர்களைக் கடுமையாக பாதித்துள்ளது. பொருளாதார ரீதியாக அந்த வீரர்கள் வருவாயை இழப்பது மட்டும் பாதிப்பல்ல, அவர்களின் கிரிக்கெட் வளர்ச்சியும் இங்கே கேள்விக்குறியதாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட வீரர்களில் ஒருவர்தான் பிஹார் மாநில கிரிக்கெட் அணியின் கேப்டன் அசுதோஷ் அமன்.

கடந்த 2018 - 19 ரஞ்சி சீசனில் 68 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அமன். 1974-75ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி 64 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 44 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார் அமன். இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக முதல் தர கிரிக்கெட் இல்லாமல் இருப்பது 35 வயதான அமனின் கிரிக்கெட் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

பிஹாரின் புகழ்பெற்ற கயா மாவட்டத்தில் பிறந்த அமனின் கிரிக்கெட் பயணம் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. சச்சினை டிவியில் கண்டு, அவருக்குக் கிடைத்த வரவேற்பால் உத்வேகம் பெற்று கிரிக்கெட்டுக்குள் வந்தவர் அமன். அதுவும் முறையான பயிற்சி எடுத்து நேரடியாக கிரிக்கெட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அமனின் குடும்பத்தினர் விளையாட்டை விட படிப்பே வாழ்க்கையில் ஏற்றத்தைக் கொடுக்கும் என்று படிப்பதையே அவருக்கு ஊக்குவித்தனர்.

இதனால் பத்தாம் வகுப்பு முடித்த கையோடு இந்திய விமானப்படை தேர்வில் வென்று பணிக்குச் சேர்ந்தார். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டை கனவைக் கொண்டிருந்த அமனுக்கு இந்திய விமானப்படை புதிய வாய்ப்பைக் கொடுத்தது. விமானப்படைக்கென தனியாக கிரிக்கெட் அணி உள்ளது தெரியவர, அதில் இணைந்துகொண்டார். விமானப்படையில் சேரும் வரை அவர் லெதர்-பால் கிரிக்கெட் விளையாடியதில்லை. அதுவரை அவர் விளையாடியது டென்னிஸ் பந்தில் மட்டுமே. இந்த அனுபவம் கிரிக்கெட்டில் அவருக்குப் புதிய அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுத்தது.

விரைவாகவே, விமானப்படை அணியின் முக்கிய வீரராக மாறினார். விமானப்படை கிரிக்கெட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் சிறப்புப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். 2010-11இல், அவர் சர்வீசஸ் அணியில் நுழைந்து லிமிடெட் ஓவர் போட்டிகளில் பங்கேற்றார். ரஞ்சி வாய்ப்பு விமானப்படை அணி மூலமாக இல்லாமல், பிஹார் அணி மூலமாக அவருக்குக் கிடைத்தது. விடுமுறையில் அமன் பிஹார் சென்றபோது அவரின் ஆட்டத்திறனைக் கேள்விப்பட்டு, ​​கயா மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் விளையாட அவரை அணுகியுள்ளது.

அந்தத் தருணத்தில் எதிர்பாராதவிதமாக ரஞ்சி ட்ரயல்ஸுக்கு ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தப் போட்டியில் பிஹார் அணியை வழிநடத்தியவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா. ஓஜா கொடுத்த நம்பிக்கையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அமன். இந்தத் தொடரில் அவரின் சிறப்பான செயல்பாடு அந்த சீசனிலேயே பிஹார் கேப்டன் என்ற நிலைக்கு உயர்த்தியது.

இப்படி குறுகிய நேரத்தில் அவர் ரஞ்சி அணிக்குத் தேர்வானாலும், ரஞ்சியில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தும் இந்திய அணிக்குத் தேர்வாக வேண்டும் என்ற அவரின் கனவு கரோனா தொற்றால் தள்ளிப்போகிறது. ரஞ்சியில் ஜொலித்த சில வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என்றாலும், அந்த வாய்ப்பு அமனுக்கு அமையவில்லை. அவருக்கு இருந்த ஒரே வாய்ப்பாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களே உள்ளன. ரஞ்சி தொடர் ஒத்திவைக்கப்பட்ட விரக்தியில் உள்ளார் அமன். தொடரை நடத்த தங்களால் இயன்றவரை முயற்சி செய்வோம் என்று பிசிசிஐ, வீரர்களுக்கு உறுதியளித்துள்ளது. ஆனால், அதற்கு இன்னும் எவ்வளவு காலங்கள் ஆகும் என்பது தெரியவில்லை.

என்றாலும் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார் அமன். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "வயது என்பது வெறும் எண்தான். விருத்திமான் சாஹா 38 வயதிலும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். எனவே, எனது வயதைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. நான் நன்றாக விளையாடினால் எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். நாட்டிற்காக விளையாடுவதற்கான நம்பிக்கையானது நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டாலும், அதனால் வீரர்களுக்கு ஏற்படும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க பிசிசிஐ கடந்த சீசனில் 50 சதவிகித இழப்பீடு வழங்கியது. இந்த ஊதியம் கைகொடுத்தாலும், தொடர்ந்து விளையாடாமல் இருந்து ஃபார்மை இழப்பது இந்திய அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பைக் குறைக்கும் என அஞ்சுகிறார்கள் வீரர்கள்.

தகவல் உறுதுணை - indianexpress

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x