ஒரு மோசமான தினத்தில் தோல்வி அடைந்தோம்: டெல்லி கேப்டன் ஜாகீர் கான்

ஒரு மோசமான தினத்தில் தோல்வி அடைந்தோம்: டெல்லி கேப்டன் ஜாகீர் கான்
Updated on
2 min read

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியிடம் டெல்லி டேர் டெவில்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி தழுவியதையடுத்து, ‘ஒரு மோசமான தினத்தில் தோல்வி ஏற்பட்டது’ என்று டெல்லி கேப்டன் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

டாஸ் வென்ற கவுதம் கம்பீர் டெல்லி அணியை முதலில் பேட் செய்ய அழைக்க ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகையை செலவிட்டு வீரர்களை தேர்ந்தெடுத்த டெல்லி அணி 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 14.1 ஓவர்களில் 99/1 என்று அபார வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆந்த்ரே ரசல் தேர்வு செய்யப்பட்டார்.

தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ஜாகீர் கான் கூறியதாவது:

“மிகவும் கடினமான தினமாக அமைந்து விட்டது, ஆனால் இது ஒரேயொரு மோசமான தினமே, இப்படி சில சமயங்களில் நடப்பதுண்டு. எனவே இதனைப் பின்னுக்குத் தள்ளி வரும் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

நாங்கள் ஒருங்கிணைந்து மீண்டு எழுச்சியுறுவோம். இது மிகவும் பெரிய தொடர், எனவே ஒரு தோல்வியைக் கொண்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஆனாலும் களத்தில் வீரர்கள் காண்பித்த தீவிரம் மற்றும் ஆற்றல் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு இளம் அணி. டுமினி இல்லை. ஆனால் அணிச்சேர்க்கை திருப்திகரமாகவே அமைந்தது. இதில் வேறுபட்ட சிந்தனைக்கு வழியேயில்லை. கடினமான ஒரு தினம் அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எங்கள் அணியின் பேட்டிங் நிச்சயம் வரும் போட்டிகளில் அதன் திறமையை வெளிப்படுத்தும். இந்த சீசனுக்காக நாங்கள் தயார் செய்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். நிச்சயம் பெரிய ஸ்கோர்கள் வரும், எங்கள் அணியின் பேட்டிங் மீது நம்பிக்கை இருக்கிறது.

முதல் 2 ஓவர்களுக்குப் பிறகே கொல்கத்தா வீச்சாளர்கள் எங்களை சீரான நெருக்கடிக்குள்ளாக்கினர். மொகமது ஷமி வலைப்பயிற்சியில் நன்றாகவே வீசினார். நான் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

ஏப்ரல் 15-ம் தேதி டெல்லி டேர் டெவில்ஸ் தங்கள் சொந்த மண்ணில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

நேற்று முதல் 2 ஓவர்களில் குவிண்டன் டி காக், மயங்க் அகர்வால் ஜோடி 23 ரன்களை விளாசிய பிறகே ஆந்த்ரே ரசல் ஓரே ஓவரில் அதிரடி வீரர் டி காக் (17) பிறகு ஷ்ரேயஸ் ஐயர் (0) ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார். மயங்க் அகர்வாலையும் ரஸல் காலி செய்ய டெல்லி 31/3 என்று சரிவடைந்து பிறகு பிராட் ஹாக் பந்து வீச்சில் சஞ்சு சாம்சன், பவன் நெகி ஆகியோரை இழக்க கடும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய பிராத்வெய்ட் 6 ரன்களில் சாவ்லாவிடம் அவுட் ஆக 11 ஓவர்களில் 67/6 என்று டெல்லி சரிவு கண்டு பிறகு 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலக்கை கொல்கத்தா அணி 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in