Published : 17 Jan 2022 05:37 PM
Last Updated : 17 Jan 2022 05:37 PM

தடுப்பூசி செலுத்தாவிட்டால் பிரெஞ்சு ஓபனிலும் பங்கேற்க முடியாது: ஜோக்கோவிச்சுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச் | படம் உதவி: ட்விட்டர்

பாரிஸ்: கரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால், கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்று செர்பிய வீரர் நோவக் ஜோக்கோவிச்சுக்கு பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதலாவதான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது. இந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்க செர்பிய வீரரும், தரவரிசையில் நம்பர் ஒன் வீரருமான ஜோக்கோவிச் சென்றார். ஆனால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்ட ஜோக்கோவிச், தடுப்பூசி செலுத்தவில்லை.

ஆனால், ஆஸ்திரேலிய அரசின் விதிமுறைப்படி கிராண்ட்ஸ்லாம் ஓபன் விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதாகும். தடுப்பூசி செலுத்தாமல் நாட்டுக்குள் வருவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தும். ஆனால், ஜோக்கோவிச் தடுப்பூசி செலுத்தாததால் அவருக்கு வழங்கப்பட்ட விசாவை ரத்து செய்து சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியது.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜோக்கோவிச் ஆஸ்திரேலியன் ஓபனில் பங்கேற்றால் 21-வது பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைப்பார். ஆனால், தடுப்பூசி சர்ச்சையால் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் அடுத்ததாக பிரான்ஸில் 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் பங்கேற்க அனுமதியில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் விளையாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “பிரான்ஸ் நாட்டின் தடுப்பூசி சட்டத்தின்படி பிரெஞ்சு ஓபனில் பங்கேற்போர், பார்வையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாது. அதுமட்டுமல்லாமல், சட்டத்தின்படி, பொது இடங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் செல்லும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை.

ஆதலால், மே மாதம் நடக்கும் பிரெஞ்சு ஓபனிலும் வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x