

புதுடெல்லி :இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி,திடீரென விலகுவதாக நேற்று அறிவித்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆதரவும், எதி்ர்காலம் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
தோனி கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியபின் இந்திய அணியின் டெஸ்ட்கேப்டனாக கோலி பதவி ஏற்றார். ஏற்ககுறைய 8 ஆண்டுகள் கேப்டன் பதவியில் இருந்த கோலி இந்தியாவிலேயே வெற்றிகரமான கேப்டன் என்ற பெருைமயோடு வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளார். இதில் 40 வெற்றிகளையும், 17 தோல்விகளையும் சந்தித்துள்ளது இ்ந்திய அணி,11 போட்டிகளை டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்று முன்னிலையில் இருந்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு தோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றோம் என்ற புதிய வரலாறு படைக்க முடியாமல் இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது.
இதையடுத்து, விராட் கோலி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவி்ப்பை திடீரென வெளியி்ட்டார்.கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கான எந்த விதமான காரணங்களையும் தெரிவிக்காத கோலி, தன்னுடைய பணிக்காலத்தில் 120 சதவீதம் உழைப்பைக் கொடுத்திருக்கிறேன், முழுநேர்மையுடன் பணியாற்றினேன் என வலியுறுத்தியிருந்தார்.
தான் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் என்று நம்பிக்கை வைத்த எம்எஸ் தோனிக்கும், வெற்றிகரமான கேப்டனாக வலம்வரச்செய்த முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் கோலி நன்றி தெரிவித்திருந்தார்.
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகினாரா அல்லது விலகுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டாரா அல்லது ேவறு ஏதாவது காரணமா என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியவரும்.
இதற்கிடையே விராட் கோலிக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில் “ அன்புள்ள விராட் கோலி, பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான ரசிகர்களால் நீங்கள் நேசிக்கப்பட்டு வருகிறீர்கள்.இந்த காலகட்டத்திலும்கூட உங்கள் ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். மற்றொரு இன்னிங்ஸ் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.