Published : 13 Jan 2022 08:56 am

Updated : 13 Jan 2022 11:12 am

 

Published : 13 Jan 2022 08:56 AM
Last Updated : 13 Jan 2022 11:12 AM

வெற்றி வாய்ப்பிருக்கிறது: புயல்வேகப் பந்துவீச்சை தாக்குப்பிடிக்குமா இந்தியா? பும்ரா கோபம் தேவையற்றது

bumrah-five-for-steals-petersen-s-thunder-before-south-africa-strike-vital-blows
களத்தில் நிற்கும்புஜாரா, கேப்டன் கோலி | படம் உதவி ட்விட்டர்


கேப்டவுன்: கேப்டவுன் நகரில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி வெல்வதற்கு வாய்ப்பிருந்தாலும், ரபாடா, ஆலிவர், ஜேஸன், இங்கிடியின் புயல்வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 70 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. புஜாரா 9 ரன்கள், கோலி 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரு அனுபமான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் நிலையில் இருவரின் விக்கெட்டுகளுமே இந்திய அணிக்கு முக்கியமானவை.

இருவரும் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடினால் மட்டுமே இந்திய அணி சவால் விடுக்க முடியும் இல்லாவிட்டால் வெற்றி வாய்ப்பைக் கோட்டைவிட வேண்டியதுதான்.

கேப்டவுன் ஆடுகளம் நாட்கள் செல்லச் செல்ல வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக மாறும். ஆதலால், இந்திய அணி குறைந்தபட்சம் 300 ரன்கள் இலக்கு வைத்துவிட்டு தென் ஆப்பிரிக்க அணியை சுருட்ட முயன்றால் நிச்சயம் வெற்றி பெற முடியும். கடந்த போட்டியைப் போன்று 250 ரன்களுக்குள்ளாக வைக்கப்படும் இலக்கு இந்தியாவின் வெற்றிக்கு பாதுகாப்பானது கிடையாது

இந்திய அணியின் ெவற்றி என்பது கேப்டன் கோலி, புஜாரா,ரஹானே ஆகிய 3 அனுபவமிக்க பேட்ஸ்மேன்களின் கரங்களில் இருக்கிறது. அதிலும் புஜாரா, ரஹானேவுக்கு இந்த 2-வது இன்னிங்ஸ் அவர்களின் டெஸ்ட் வாழ்க்கையை தீர்மானிக்கும் அக்னிப்பரிட்சையாகக் கூட இருக்கலாம். இந்த இன்னிங்ஸில் இருவரும் நிலைத்து குறைந்தபட்சம் அரைசதம் அடித்துவிட்டாலே தங்கள் இருப்பைத் தக்கவைத்துவிடுவார்கள். இல்லாவிட்டால், இதோடு சரி ரஹானேவுக்கும், புஜாராவுக்கும் அணியில் சிறிகு காலத்துக்கு இடம் இருக்காது

காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்ற பழமொழி இருக்கிறது, அதுபோல, ஏற்கெனவே பிசிசிஐயுடன் மோதலில் ஈடுபட்டு கோலி சிக்கலில் இருக்கிறார். கோலியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் எந்தக் காரணத்தை வைத்து கத்தி போடலாம் என்று பிசிசிஐ காத்திருக்கிறது. ஒருவேளை இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பிருக்கும் கோலி ஸ்கோர் ெசய்யமுடியாமல் பேட்டிங்கில் சொதப்பினால்இதை காரணமாக வைத்து டெஸ்ட் கேப்டன் பதவிகூட பறிக்கப்படலாம்.

அதுமட்டுமல்லாமல் விராட் கோலி டெஸ்ட்அரங்கில் சதம் அடித்து 2 ஆண்டுகளாகிவிட்டது, இந்திய அணியை சரிவிலிருந்தும், இக்கட்டிலிருந்தும் மீட்கவும் இது சரியான வாய்ப்பாக கோலிக்கி இருக்கிறது, தன்மீதான அனைத்து பழிகளுக்கும், கோபங்களுக்கும் பதிலடி கொடுக்க வேண்டுமானால், கோலியிடம் இருந்து மிகப்பெரிய இன்னிங்ஸ் கிைடத்துவிட்டால் நிச்சயம் இந்திய அணிக்குத்தான் வெற்றி.

இந்திய அணியின் வெற்றிக்கு குறைந்தபட்சம் இன்னும் 230 ரன்கள் அதாவது 300 ரன்கள் அவசியம். அவ்வாறு இருந்தால், தென் ஆப்பிரி்க்க அணியை நிச்சயம் சுருட்டி வரலாற்று வெற்றி பெற முடியும்.
ஆனால், ராபாடா, ஆலிவர், ஜேஸன், இங்கிடி ஆகியோரின் புயல்வேகப் பந்துவீச்சையும், லைன்லென்த்தில் ஈட்டிபோல இறங்கும் பந்துவீச்சையும் சமாளித்து இந்தியாவின் 3 அனுபவ பேட்ஸ்மேன்கள் விளையாடுவார்களா என்பது சந்தேகம்தான்.

குறிப்பாக இன்று காலை முதல் செஷசன் மிகவும் முக்கியமாகும். ஒருவேளை இன்று காலை செஷனுக்குள் இந்திய அணி விக்கெட் எதையும் இழக்காவிட்டால், ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்படும். கோலி, புஜாரா ஆட்டமிழந்துவி்ட்டால் இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஆதலால் இந்திய அணியின் வெற்றி தோல்வி என்பது கோலி, புஜாரா, ரஹானே, ரிஷப்பந்த் ஆகியோரின் பேட்டிங்கைப் பொறுத்தான் அமையும். குறைந்த இலக்கை வைத்துவிட்டு, ஒட்டுமொத்த சுமையையும் பந்துவீச்சாளர்கள் மீது சுமத்துவதும் நியாயமற்றது, வெற்றிவாய்ப்புக்கான ஸ்கோரை வகுத்துவிட்டு, பந்துவீச்சாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் நிச்சயம் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வெற்றி பெற்றுக் கொடுத்துவிடுவார்கள்.

2-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜேஸன் 7ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஸ்டெம்ப் தெறிக்க க்ளீன் போல்டாகி வெளியேறினார். அப்போது பும்ராவின் கோபம், முகபாவனை அனைத்தும் தேவையற்றதாகவே இருந்தது. கடந்த 2018ம் ஆண்டு இதே மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய பும்ரா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை தரம் உயர்த்திக்கொண்டிருக்கிறார். பந்துவீச்சில் தனது தரத்தை உயர்த்திக்கொண்ட பும்ரா, தனது செயலிலும் தரத்தை உயர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

ஆனால், பும்ராவை உசுப்பேற்றும் வகையில் கோலி தனது கையை வைத்து பம்ப்பிங் செய்ததும், சீண்டியதும் தேவைற்றது. இதுபோன்ற தேவையற்ற அக்ரஸன், வீரர்களுக்கு இடையே கோபத்தைத்தான் வளர்க்கும்.

கோலி என்றாலே அக்ரஸன் என்ற வார்த்தை பிராண்டாகவை கட்டமைக்கப்பட்டுவிட்டது அவ்வாறு அமைதியாக இருந்தால் அவர் கோலியில்லை என்ற கதையும் புனையப்படுகிறது. எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து விளையாடுவதெல்லாம் மலையேறிவிட்டது, அதை கேப்டன் கோலியும், தனக்கு கீழ் உள்ள வீரர்களுக்கும் கோலி அதை உணர்த்தவேண்டும்.

கடந்த டெஸ்ட்போட்டியில் ஜேஸனுடன் பும்ரா மோதலில் ஈடுபட்டார். அதை அந்த டெஸ்ட் போட்டியோடு மறந்திருக்கலாம். ஆனால், அதை நஞ்சுபோல் வைத்திருந்து ஜேஸன் ஆட்டமிழந்தபின் அந்த வெறுப்பை உமிழ்வதும், அவரை பார்வையாலும், செயலாலும் சீண்டுவதும் வளர்ந்துவரும் வீரர் பும்ராவுக்கு தேவைற்றது. 27 டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடியுள்ளோம் என்பதை பும்ரா நினைவில் கொள்ள வேண்டும்.

ஜாம்பவான் கபில்தேவ், வால்ஷ், ஆம்புரோஸ்,மார்ஷல், ஹாட்லி, போன்றோர் விக்கெட் எடுத்தால் அமைதியாக இருந்துதான் ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றார்கள். ஜென்டில்மேன் விளையாட்டு என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்கள். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் ஆதலால் ஜேஸனிடம் கோபப்பட்டது தேவையற்றது

இந்திய வீரர்களைப் போன்று ஐபிஎல் டி20 போட்டியில் கோடிக்கணக்கிலான பணத்தில் புரண்டு வளர்ந்தவர்கள் இல்லை தென் ஆப்பிரிக்க வீரர்கள். ஆண்டுக்கணக்கில் இனவெறிக்கு அடிமையாகி இருந்து கடந்த சில தசமஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டின் வெளிச்சத்துக்குவந்துள்ளார்கள்.

அதிலும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த பல வீரர்கள், இளம் வீர்களான பீட்டர்ஸன், ஜேஸன், ரபாடா போன்றோர் இருக்கிறார்கள். இவர்களிடம் இந்திய வீரர்கள் நட்புடன் இருப்பதை விடுத்து ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக விக்கெட் வீழ்த்தியுடன் வெளியே-போ என பார்வையில் ஸ்லெட்ஜிங் செய்வதை விடுத்து, நாகரீகமாக நடக்க வேண்டும். ஜேஸன் ஒன்றும் சர்வதேச பேட்ஸ்மேன் கிடையாது, அவருக்கு இது 2-வது டெஸ்ட் போட்டிதான் என்பதை பும்ரா நினைவில் வைக்க வேண்டும்

முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

Virat KohliIndia in South AfricaKeegan PetersenSouth Africa vs IndiaJasprit BumrahCape Town#indvssaஇந்தியஅணிதென் ஆப்பிரிக்க அணிபும்ராகேப்டவுன் டெஸ்ட்விராட் கோலிஜேஸனுடன் பும்ரா மோதல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x