

ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டி யில் இந்திய வீரர் சிவா தபா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். மகளிர் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
சீனாவின் கியான்' அன் நகரில் நடைபெற்று வரும் தகுதி சுற்று போட் டியில் ஆடவர் பிரிவின் 56 கிலோ எடை பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சிவா தபா, 2013-ம் ஆண்டு உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற கஜகஸ்தானின் ஹைராட்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட சிவா தபா தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் சாட்ஷாய் புட்டியை சந்திக்கிறார் சிவா தபா.சிவா தபா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
மேரி கோம் தோல்வி
சிவா தபா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அதேவேளையில் மேரி கோம் வாய்ப்பை இழந்துள்ளார். 51 கிலோ எடை மகளிர் பிரிவு அரையிறுதியில் அவர் சீனாவின் ரென்னிடம் தோல்வியடைந்தார். இந்த தகுதி சுற்று போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெறும் வீராங்கனைகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
அரையிறுதியில் தோல்வி யடைந்த மேரி கோம் வெண்கல பதக்கமே பெற்றதால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். அவருக்கு கடைசியாக இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. மே மாதம் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.