Last Updated : 10 Jan, 2022 02:14 PM

 

Published : 10 Jan 2022 02:14 PM
Last Updated : 10 Jan 2022 02:14 PM

சென்னை சிறுவனுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம்: விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து

73-வது கிராண்ட் மாஸ்டர் பரத் சுப்பிரமணியன் | கோப்புப்படம்

சென்னை : 14 வயதில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பரத் சுப்பிரமணி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, இந்தியாவின் 73-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை அடைந்தார்.

இத்தாலி நகரில் உள்ள கட்டோலிகா நகரில் நடந்த வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் 6.5 புள்ளிகள் பெற்று பரத் சுப்பிரமணியம் 7-வது இடம் பெற்றார். ஆனால், கிராண்ட் மாஸ்டருக்குத் தேவையான 2500 எலோ ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றதையடுத்து, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார்.

வெர்கானி கோப்பை செஸ் போட்டியில் 9 சுற்றுகளில் 6.5 புள்ளிகளைப் பெற்ற பரத், 7-வது இடத்தைப் பெற்றார். ஆனால், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற 3 ஜிஎம் விதிகளை பெற்றதையடுத்து, இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த செஸ் போட்டியில் இந்திய வீரர் எம்ஆர் லலித் பாபு 7 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மாஸ்கோவில் நடந்த ஏரோபிளாட் ஓபனில் 11-வது இடத்தை பரத் பெற்றாலும் முதல் ஜிஎம்முக்கான தகுதி பெற்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்கேரியாவில் ஜூனியர் ரவுண்ட் செஸ் போட்டியில் 4-வது இடத்தை பரத் பெற்று 2-வது ஜிஎம் தகுதி பெற்றார்.

தற்போது இந்தப் போட்டியில் 7-வது இடம் பெற்றாலும் 3-வது ஜிஎம் தகுதி பெற்றதையடுத்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பரத் சுப்பிரமணியம் பெற்றார். 14 வயதான பரத், தன்னுடைய 11 வயது 8 மாதங்களிலேயே சர்வதேச மாஸ்டர் பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் 71-வது கிராண்ட் மாஸ்டராக சங்கல்ப் குப்தாவும், 72-வது கிராண்ட் மாஸ்டராக மித்ராபா குஹாவும் தேர்வானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரத் சுப்பிரமணியமுக்கு 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக வந்துள்ள பரத் சுப்பிரமணியமுக்கு வாழ்த்துகள். அறிவார்ந்த சிறுவன் பரத், சிறந்த உள்ளுணர்வு இருக்கிறது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

அனைத்து இந்திய செஸ் சம்மேளனம் தங்களின் இணையதளத்தில் பதிவிட்ட கருத்தில், “ இத்தாலியில் நடந்த வெர்கானி ஓபனில் 2500 ரேட்டிங் புள்ளிகளைக் கடந்து, இறுதி ஜிஎம் விதிகளைக் கடந்து, 14 வயது பரத் சுப்பிரமணியம் நாட்டின் 73-வது கிராண்ட் மாஸ்டராக உருவாகியுள்ளார். அவருக்கு அனைத்து இந்திய செஸ் சம்மேளனம் வாழ்த்து தெரிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x