Published : 09 Jan 2022 02:49 PM
Last Updated : 09 Jan 2022 02:49 PM

3-வது டெஸ்ட்டில் சிராஜ் சந்தேகம்: மாற்று வீரராக யார் தேர்வு? தேர்வுக்குழு முன்னாள் தலைவர் பரிந்துரை

உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா | கோப்புப்படம்

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கேப்டவுனில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சிராஜ் இடம் பெறுவது சந்தேகம் என்ற நிலையில் மாற்று வீரராக ஒருவரைத் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் பரிந்துரை செய்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் 4-வது இன்னிங்ஸில் பந்துவீசாமல் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் முழுமையாக குணமடையாததால் அவரால் 3-வது டெஸ்ட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

3-வது டெஸ்ட்டில் விராட் கோலி விளையாடுவார் என சூசகமாகத் தெரிவித்த பயிற்சியாளர் ராகுல் திராவிட், சிராஜ் உடல்நிலை குறித்து நம்பிக்கையுடன் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் சிராஜ் கேப்டவுன் டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இதனால் வேகப்பந்துவீச்சுக்கு அனுபவம் வாய்ந்த இசாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேப்டவுன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், அங்கு நல்ல அனுபவமான வேகப்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்வது அவசியம் என்று தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எம்எஸ்கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

எம்எஸ்கே பிரசாத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

''கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் இந்திய அணியில் இடம் பெறாத நிலையில், அனுபவம் வாய்ந்த உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா இருவரில் யாரைச் சேர்ப்பது என்ற கேள்வி எழும். என்னைப் பொறுத்தவரை ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டிலேயே இசாந்த் சர்மாவைச் சேர்த்திருக்க வேண்டும்.

உமேஷ் யாதவின் உயரம், வேகப்பந்துவீச்சுக்கு வலு சேர்க்கும், அதிலும் ஜோகன்னஸ்பர்க், கேப்டவுன் போன்ற மைதானங்களில் உயரமான பந்துவீச்சாளர்கள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்தியா மாதிரியான ஆடுகளங்களில் உமேஷ் யாதவைத் தேர்வு செய்யுங்கள் எனக் கூறியிருப்பேன்.

இசாந்த் சர்மா திறமை மீது கோலி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறாரா என என்னால் சொல்ல முடியாது. ஆனால், இசாந்த் சர்மா விளையாடினால், உமேஷ் யாதவ் இருந்தால் என்ன தாக்கம் இருக்குமோ அதைவிட அதிகமாக இருக்கும்.

அதற்குக் காரணம் இசாந்த் சர்மாவின் உயரம், லென்த்தில் பந்து வீசுவது, ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், இவரின் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்குப் பெரிய குடைச்சலைக் கொடுக்கும். அதிலும் 4-வது ஸ்டெம்ப்புக்கு இசாந்த் சர்மா பந்துவீசும்போது, பேட்மேன்கள் போதுமான அளவு விளையாட இடம் கொடுப்பார். இதனால் விக்கெட் எளிதாக விழும். இசாந்த் சர்மாவின் ஃபார்ம் குறித்தும் தேர்வுக் குழுவினர் ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம்''.

இவ்வாறு பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x