Last Updated : 18 Apr, 2016 09:22 AM

 

Published : 18 Apr 2016 09:22 AM
Last Updated : 18 Apr 2016 09:22 AM

பஞ்சாப் அணிக்கு முதல் வெற்றி: 6 விக்கெட் வித்தியாசத்தில் புனேவை வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் வெற்றியை பெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் புனே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அது வீழ்த்தியது.

புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்த பஞ்சாப் அணி, இப்போட்டியில் வென்று புள்ளிக்கணக்கை தொடங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

டாஸில் வென்ற புனே அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், டு பிளெஸ்ஸியும் களம் இறங்கினர். நிதானமாக ஆடத் தொடங்கிய புனே அணி, 10 ரன்களில் ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. இந்த விக்கெட்டை சந்தீப் சர்மா வீழ்த்தினார்.

ஒருபுறம் டு பிளெஸ்ஸி உறுதியாக ஆடி ரன்களைக் குவித்தாலும் மறுபுறம் சீரான இடைவெளியில் புனே அணி விக்கெட்களை இழந்தது. பீட்டர்சன் (15 ரன்கள்), பெரைரா (8 ரன்கள்), ஸ்மித் (38 ரன்கள்), தோனி (1 ரன்), இர்பான் பதான் (2 ரன்கள்) என்று அடுத்தடுத்து விக்கெட்கள் விழ புனே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய டு பிளெஸ்ஸி 53 பந்துகளில் 67 ரன்களை எடுத்தார். பஞ்சாப் அணிக்காக மோகித் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றிக்கு 153 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த பஞ்சாப் அணி, தொடக்கம் முதலே புனேவை வாட்டி எடுத்தது. அதன் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய்யும், மனன் வோராவும் புனே அணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தனர். புனே அணிக்கு நீண்டநேரம் போக்கு காட்டிய இந்த ஜோடி 97 ரன்களில் பிரிந்தது. 33 பந்துகளில் 51 ரன்களை எடுத்த மனன் வோரா, அங்கித் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஷான் மார்ஷ் (4 ரன்கள்), முரளி விஜய் (53 ரன்கள்), மில்லர் (7 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களை முருகன் அஸ்வின் வீழ்த்த, புனே அணிக்கு சற்று நம்பிக்கை வந்தது. ஆனால் 14 பந்துகளில் 32 ரன்களைக் குவித்த மேக்ஸ்வெல், அந்த நம்பிக்கையை பொய்யாக்கினார். அவரது அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை ருசித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x