Published : 28 Jun 2014 11:02 AM
Last Updated : 28 Jun 2014 11:02 AM

கொலம்பியாவின் கனவு நனவாகுமா?

ரியோ டி ஜெனிரோவில் நடை பெறும் மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உருகுவேயும், கொலம்பியாவும் மோதுகின்றன. உருகுவே அணியின் முன்னணி ஸ்டிரைக்கரான லூயிஸ் சுரேஜ், இத்தாலி பின்கள வீரர் செல்லினியை கடித்ததால் அவருக்கு 9 சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதனால் அவர் இந்தப் போட்டியில் விளையாடமுடியாது. இது உருகுவே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். எனவே கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலடிக்க உருகுவே கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

கலக்கும் ரோட்ரிகஸ்

அதேநேரத்தில் குரூப் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வென்றிருக்கும் கொலம்பியா இந்த ஆட்டத்திலும் அபாரமாக ஆடும் என தெரிகிறது.

அந்த அணியின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ், கேப்டன் ஜாக்சன் மார்ட்டினிஸ், ஜுவான் காட்ராடோ ஆகியோர் கொலம்பியாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். ரோட்ரிகஸ் இந்த உலகக் கோப்பையில் இதுவரை 3 கோல்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உருகுவே அணியில் லூயிஸ் சுரேஜ் விளையாட முடியாது என்பதால் அவருக்குப் பதிலாக மூத்த வீரரான டீகோ ஃபோர்லான் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உருகுவேயின் வெற்றி டீகோ போர்லான் மற்றும் எடின்சன் கவானி ஆகியோரின் கையில்தான் உள்ளது.

பாதிப்பில்லை

சுரேஜ் விளையாடாதது குறித்துப் பேசிய உருகுவே பயிற்சியாளர் ஆஸ்கார் டபாரெஸ், “சுரேஜ் விளையாடாதது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரு வீரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் மற்றொரு வீரருடன் விளையாட வேண்டியதுதான்.

சுரேஜ் இல்லாமலேயே நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கிறோம். அதில் சிலவற்றில் வென்றிருக்கிறோம். சிலவற்றில் தோற்றிருக்கிறோம். இந்த உலகக் கோப்பையில் கோஸ்டா ரிகாவுடனான முதல் ஆட்டத்திலும் சுரேஜ் இல்லாமல்தான் விளையாடினோம்” என்றார்.

கொலம்பியா, உருகுவேயை வீழ்த்தும்பட்சத்தில் உலகக் கோப்பையில் முதல்முறையாக காலிறுதிக்கு தகுதிபெற்ற பெருமையைப் பெறும். இதற்கு முன்னர் 1990-ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்ற கொலம்பியா, அந்த சுற்றில் கேமரூனிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

இதுவரை

உருகுவேயும் கொலம்பியாவும் இதுவைர 38 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் உருகுவே 18 முறையும் கொலம்பியா 11 முறையும் வெற்றி கண்டுள்ளன. 9 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x