

ஜோகன்னஸ்பர்ஸ்: ஒரு பேட்ஸ்மேனுக்கு பேட்டிங் ஃபார்ம் தற்காலிகம்தான், தரம்தான் நிரந்தரம் என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் சத்தேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியி்ல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக்கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கத் தொடர்தான் இருவருக்கும் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று சமீபத்தில் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகாவது இருவரின் பேட்டிங்கிலும் ஏதாவது முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
ரஹானே, புஜாரா இருவருமே செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன் சேர்க்கவில்லை.
ஜோகன்னஸ்பர்க்கில் புஜாரா, ரஹானே பேட்டிங்கைப் பார்த்து எரிச்சலும், வெறுப்பும் அடைந்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 2-வது இன்னிங்ஸ்தான் புஜராவுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
புஜாராவின் கணக்கைக் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து எடுத்துக்கொண்டால் இதுவரை 45 இன்னிங்ஸ் விளையாடி அதில் 1,189 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் அவரின் சராசரி 26.89 ரன்கள் மட்டும்தான். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் புஜாரா கடைசியாக சதம் அடித்தார் அதன்பின் அடிக்கவில்லை.
ரஹானே, புஜாரா இருவர் மீதும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில் 2-வது இன்னிங்ஸில் இருவரும் அரை சதம் அடித்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
தனது இன்னிங்ஸ் குறித்து புஜாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:
''சுனில் கவாஸ்கர் எங்களை விமர்சனம் செய்ததைப் பற்றிக் கவலைப்படவில்லை. நானும் ரஹானேவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களுக்கு அணி நிர்வாகம் பக்கபலமாக இருக்கிறது. சுனில் கவாஸ்கர் என்ன மாதிரியான விமர்சனம் வைத்தாலும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவே விரும்புகிறோம். எப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போது அவரிடம் பேசுவேன், எனக்குப் பல்வேறு நேரங்களில் ஆதரவாக இருந்துள்ளார்
ஒரு பேட்ஸ்மேன் ஃபாரம் இழக்கும்போது அவருக்கு நெருக்கடி வரும் காலம் வரும், அவரின் பேட்டிங் மீது கேள்வி எழும். ஆனால், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நானும், ரஹானேவும் எங்களின் இயல்பான ஆட்டத்திலிருந்து தவறவில்லை. எங்களைப் பொறுத்தவரை பேட்டிங் ஃபார்ம் என்பது தற்காலிகம், தரம் என்பதுதான் நிரந்தரம்.
கடந்த காலங்களில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறோம். எங்கள் மீது அணி நிர்வாகம் அதிகமான நம்பிக்கை வைத்திருந்தது. அதற்கான விலையையும் நாங்கள் கொடுத்தோம், பேட்ஸ்மேன் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிவிட்டால், ரன்களை ஸ்கோர் செய்வார், தொடர்ந்து ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார்.
வெளியிலிருந்து பல்வேறு விமர்சனங்கள், கருத்துகள் வந்தபோதிலும் அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள், கேப்டன் என அனைவரும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதிகமான ரன்களை அடிக்க முடியாத தருணத்திலும் சரியான விஷயத்தைத் தொடர்ந்து செய்வது அவசியம். உங்களுடைய வழக்கமான பேட்டிங் உத்தியிலிருந்து மாறக்கூடாது. நிச்சயம் ஃபார்ம் திரும்பவரும், அப்போது சரியாக செய்யப்பட்டவை அனைத்தும் ரன்களை வாரி வழங்கும். விரைவில் ஃபார்முக்கு வருவோம்''.
இவ்வாறு புஜாரா தெரிவித்தார்.